ஆன்மிகம்

தடைகளை நீக்கி வெற்றி தரும் விநாயகர் வழிபாடு

Published On 2017-10-22 05:37 GMT   |   Update On 2017-10-22 05:37 GMT
எடுத்த செயல் வெற்றி பெற காரிய சித்திமாலை பாடலை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும்..
சதுர்த்தி திதி அன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம். எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது காரிய சித்திமாலை பாடலாகும். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்த பாடல் துதியை, விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். இந்தப் பாடலை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) பாராயணம் செய்பவர்கள் பெரும் பாக்கியம் பெருவர். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். இந்தப் பாடலை எட்டு நாட்கள் பாடி வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கை கூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழ்வார்கள் என்பது ஐதீகம்.

விநாயகர், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் ஆகிய ஐந்து பெரும் தெய்வங்களை, ஒரே நேரத்தில், ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்யும் முறைக்கு ‘கணபதி பஞ்சாயதனம்’ என்று பெயர். இந்த பூஜையில் விநாயகரை நடுநாயகமாக வைத்து மற்ற தெய்வங்களை சுற்றிலும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும். உப்பால் ஆன விநாயகரை வணங்கினால், எதிரிகள் விலகுவர். கல்லில் அமைந்த விநாயகரை வழிபட, சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும்.
Tags:    

Similar News