ஆன்மிகம்

நாக தோஷம் போக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி

Published On 2017-10-13 06:36 GMT   |   Update On 2017-10-13 06:36 GMT
நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.  ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக்கிறார்.

பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று. ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது.

இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது. வேலூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் ஆம்பூர் இருக்கிறது. இவ்வூருக்கு ஏராளமான பேருந்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் வசதியும் உண்டு. ரெயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மார்க்கெட் அருகே இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News