ஆன்மிகம்

திருமணத்தடை, குழந்தைப்பேறு அருளும் கோனியம்மன்

Published On 2017-10-05 06:31 GMT   |   Update On 2017-10-05 07:45 GMT
கோனியம்மனை வேண்டிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இக்கோயில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண்மேட்டையும் கட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.

சிவ அம்ச அம்பிகை: கோனியம்மன் வடக்கு நோக்கி எட்டு கரங்களில் சூலம் உடுக்கை வாள் சங்கம் கபாலம் அக்னி சக்கரம் மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல இடது காதில் தோடும் வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும் சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது சாந்த விநாயகர் சன்னதில ஆதி கோனியம்மன் சன்னதி மகாளி அம்மன் சன்னதி.

இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.

இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News