ஆன்மிகம்

திருமணம் தடை நீக்கும் வெள்ளலூர் தேனீஸ்வரர்

Published On 2017-09-20 06:15 GMT   |   Update On 2017-09-20 06:15 GMT
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி தரும் பேராற்றல் வெள்ளலூர் தேனீஸ்வரருக்கு உண்டு. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கல்யாணம்-ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இருமனம் ஒருமனமாக திருமணம் அவசியம். எவ்வளவு அற்புதமான நிகழ்வு இது. உண்மையை ஆழ்ந்து யோசித்தால் இறைவனின் சூட்சமம் இதில் இருக்கிறது. எங்கோ பிறந்த ஆண், எங்கோ பிறந்த பெண். இவர்கள் இருவரும் இல்லறத்தால் இணைந்து ஜனனத்தை உண்டாக்குகிறார்கள்.

அப்படிப்பட்ட அற்புதமான திருமண வாழ்க்கை, சிலருக்கு வயதைக் கடந்தும் கிடைக்காமல் தள்ளிப்போகலாம். அதனால் ஏக்கம் கொள்பவர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகம். ஜாதகம் அல்லது பொருளாதார காரணங்களால் தங்கள் திருமணம் தள்ளிப்போகிறதே என்ற கவலை இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மனக்குறைகளை ஆதிபரம்பொருளாகிய தேனீஸ்வரரிடம் கொட்டுங்கள். தேன் போன்ற இனிமையான இல்லற வாழ்க்கையை அவர் கொடுப்பார். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி தரும் பேராற்றல் அவருக்கு உண்டு. இத்தகைய சிறப்பு பெற்ற தேனீஸ்வரர் திருத்தலம் கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது.

இந்த தலத்துக்கு திருமண பாக்கியம் வேண்டி வரும் பெண்கள், மூலவர் தேனீஸ்வரருக்கு மாலை வாங்கி பூஜிக்க வேண்டும். அப்போது உடன் அவரது ஜாதக நகலையும் கொண்டு வர வேண்டும். மாலையை சிவனுக்கு அணிவித்தும், ஜாதக நகலையும் அவரது திருபாதத்தில் வைத்து சிவாச்சாரியார் பூஜை நடத்தி பின்னர், சிவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, அந்த பெண்ணுக்கு அணிவிக்கின்றனர்.

திருமண வரம் கேட்டு வந்த பெண், பின்னர் அன்னை சிவகாமி சுந்தரியை தரிசித்து விட்டு கோவிலை வலம் வந்து அந்த மாலையுடன் வீடு திரும்புகிறார். வீட்டில் சாமியிடம் இருந்து தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அங்குள்ள பூஜை அறையில் பத்திரப்படுத்துகிறார். பின்னர் திருமணம் முடிந்த பிறகு அந்த மாலையை தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு வந்து சாமிக்கு திரும்ப ஒப்படைத்து வேண்டுதல் நிறைவேறியதற்கு பூஜை செய்து நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.

இதே போல் திருமணம் வேண்டி வரும் ஆண்களுக்கு அன்னை சிவகாமி சுந்தரி கழுத்தில் கிடந்த மாலை அணிவிக்கப்படுகிறது. சுவாமியும், அம்பாளும் தாங்கள் அணிவித்த மாலையை பெற்று கொண்ட பக்தர்களுக்கு திருமண காரியத்தை விரைந்து நடக்க ஒருவருக்கொருவர் உத்தரவிடுவதாக ஐதீகம். இந்த பிரார்த்தனை விரைந்து கைக்கூடுவதாக இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தலத்தில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு நிற பூக்களை தேனீஸ்வரருக்கு படைத்து ராகு- கேது தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
Tags:    

Similar News