ஆன்மிகம்

செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் ஆலயம்

Published On 2017-09-11 03:46 GMT   |   Update On 2017-09-11 03:46 GMT
செவ்வாய் சம்பந்தமான எந்த தோஷத்திற்கும், களத்திர தோஷம், திருமணத்தடை முதலியவற்றிற்கும் நம்பிக்கையுடன் வந்து வழிபடுவோருக்கு வைத்தீஸ்வரன் ஆலயம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள புள்ளிருக்கு வேலூர் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளது போன்று அனைத்து சிறப்பும் பெற்றது பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் ஆலயம்.

இந்த தலத்திற்கு நவலிங்கத் தலம் எனும் சிறப்புப் பெயரும் உண்டு. இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கோபுர வாசல் வழியாகச் சென்றால் மங்கள தீர்த்தம் என்னும் ஆலயத் திருக்குளம் அமையப் பெற்றுள்ளது. இந்த புனித நீரில் நீராடி இறைவனை வழிபட்டால், தீராத செவ்வாய் தோஷம் தீரும் என்பது ஐதீகம்.



தேவேந்திரன் தன் பிணியினைப் போக்கவும் மற்றும் இந்த தலத்தில் செவ்வாய் அன்று இந்த மங்கள தீர்த்தத்தில் புனித நீராடும் பக்தர்களின் பிணியையும் போக்க வேண்டும் என்றும் ஈசனிடம் வரம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திரனின் பிணி நீக்கி அருள் செய்ததுடன் இங்குள்ள சிவலிங்கத்தினை வழிபடுவதால், பிணிகளை தீர்ப்பதால் ஈஸ்வரனுக்கு வைத்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

வெப்ப நோயினைப் போக்க, வெல்லம் வாங்கி திருக்குளத்தில் கரைத்தால் நோய் நீங்கும். செவ்வாய் சம்பந்தமான எந்த தோஷத்திற்கும், களத்திர தோஷம், திருமணத்தடை முதலியவற்றிற்கும் நம்பிக்கையுடன் வந்து வழிபடுவோருக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம், முருகனும், சூரியனும் வழிபட்டதால் சூரிய, செவ்வாய் பரிகாரமும் இந்த தலத்தில் செய்யலாம்.
Tags:    

Similar News