ஆன்மிகம்

ஆடை தானம் செய்தால் காவலராக வரும் பைரவர்

Published On 2017-04-24 08:27 GMT   |   Update On 2017-04-24 08:27 GMT
உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யும் போது அந்த குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவார் என்பது நம்பிக்கை.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சந்நிதிக்கு எதிரே ஸ்ரீ பைரவருக்குத் தனிக்கோவில் காணப்படுகிறது. நமது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் ஆட்சி செய்கின்றன. நவக்கிரகக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ராசி மண்டல நட்சத்திரத் தொகுதி ஒவ்வொன்றும் லிங்க வடிவில் இத்தல அதிபதியான ஸ்ரீ பைரவரை வணங்கி பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.

தெற்கு நோக்கிய கருவறையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கும் இவர் சூரசூளாமணி பைரவர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு நேர் எதிரில் முதல் பிரகாரத்தில் சப்த மாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொதுவாக சப்தமாதர்கள் தெற்குப் பிரகாரத்தில் மட்டுமே காணப்படுவர்.



ஆனால், இத்தலத்தில் சப்தமாதர்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வடக்கு பிரகாரத்தில் அமைத்து தனி வழியும் அமைத்துள்ளனர். பைரவருக்குக் கிழக்கில் சூலதீர்த்தம் என்னும் பைரவ தீர்த்தம் அமைந்துள்ளது. இங்குள்ள பைரவருக்கு கருப்பு நூலினால் நெய்யப்பட்ட வேட்டி மற்றும் துண்டினை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

பின்னர் இந்த வேண்டுதல் துணிகளை உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்கின்றனர். இவ்வாறு வஸ்திர தானம் செய்யும் குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவாராம்.

Similar News