ஆன்மிகம்

சொத்து பிரச்சனை, திருமண தடைக்கு பைரவருக்கான பரிகார முறைகள்

Published On 2017-04-13 06:25 GMT   |   Update On 2017-04-13 06:25 GMT
சொத்து பிரச்சனை, வழக்கு, கடன், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பைரவருக்கு சில பரிகாரங்களை எந்த நாட்களில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவர்கள், ஆனந்த கால பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கோர்ட்டு வழக்கு, விவாகரத்து, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும். சனியின் குருநாதர் பைரவர்.

வெள்ளிக்கிழமை அன்று ராகுகாலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மாலை அணிவித்து, புனுகு பூசி, சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டால், அர்த்தாஷ்டம சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும். கண்டகச்சனியின் பிடியில் இருந்து விடுபட திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் பைரவருக்கு அல்லி மாலை அணிவித்து, புனுகுபூசி, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த சாதம் படையலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஏழரைச்சனியின் பிடியில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, புனுகு பூசி, கருவேப்பிலைசாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட வேப்ப எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்கள் செவ்வாழை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட குணம் கிடைக்கும்.

சொத்து பிரச்சினை, இழந்த சொத்துகளை திரும்ப பெற, வழக்குகளில் வெற்றி கிடைக்க 11 மிளகை சிவப்பு நிற துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

திருமணத்தடை உள்ளவர்கள் நுனி வாழை இலையில் மஞ்சள் அரிசியை கொட்டி அதில் நட்சத்திர தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு முந்திரி கொட்டைமாலை அணிவித்து, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து 5 அல்லது 7 அஷ்டமிகளில் வழிபட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு, உயர் பதவி கிடைக்க பைரவருக்கு கிராம்பு மாலை அணிவித்து வணங்கி வர நல்லபலன் கிட்டும்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கமாலைஅல்லது எலுமிச்சை பழ மாலை அணிவித்து ,எள் கலந்த சாதம், இனிப்பு பதார்த்தங்கள், பாயசம் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர்கடன் பூஜைக்கான மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து வழிபட்டு 10 பேருக்கு அன்னதானம் செய்தால் பிதுர்கடன் நீங்கும்.

Similar News