ஆன்மிகம்

மழலைச் செல்வம் அருளும் ஸ்ரீ காலபைரவர்

Published On 2017-03-20 06:05 GMT   |   Update On 2017-03-20 06:05 GMT
மழலைச் செல்வம் வேண்டுவோர் தொடர்ச்சியாக 16 ஞாயிற்றுக்கிழமை சேத்ரபாலபுரம் ஸ்ரீ காலபைரவர் வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீ பைரவருக்கென்றே அமைந்த தனித்துவம் உடைய ஆலயங்களில் சேத்ரபாலபுரம் காலபைரவர் ஆலயம் காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம்- மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகே உள்ள இந்தத் தலத்தில்தான் பிரம்மனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறப்படுகிறது.

வடக்கே உள்ள காசி தீர்த்தத்தில் மூன்று நாட்கள் நீராடிய பலனை இங்குள்ள ஐந்து தீர்த்தங்களிலும் மூழ்கி ஒரே நாளில் அடையலாம் என்பது ஐதீகம். அதனால் இந்த க்ஷேஷத்ரபாலபுரத்தை காசிக்கும் வீசமதிகமான சிறப்பு பொருந்திய தலம் என்பர்.

இந்த ஊரில் பிறந்தவர்களுக்கும், இந்த ஊரில் இறப்பவர்களுக்கும் ஸ்ரீ கால பைரவர் வலது காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து யம வாதனையை நீக்குவதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய கருவறையை உடைய இத்தலத்தில் உள்ள இத்தல பைரவரைப் போன்ற அமைப்பு வேறு எந்தத் தலங்களிலும் கிடையாது என்று கூறப்படுகிறது.

இத்தல கால பைரவருக்கு காசியில் உள்ளது போன்றே நாய் வாகனம் காணப்படவில்லை என்பது சிறப்பானதாகும். காசியை விட அதிக பலன் தரும் தலம் என்பதால் காசிக்குச் சென்று காலபைரவரை வழிபட இயலாதவர்கள் இத்தல பைரவரை வழிபட்டும், காசி தீர்த்தமான கங்கையில் நீராட முடியாதவர்களும் இத்தலத்திற்கு வடக்கே ஓடும் காவிரியில் நீராடியும் காசிக்கு நிகரான புண்ணியத்தைப் பெறுகின்றனர்.



சித்திரை மாதம் பவுர்ணமியன்று நடைபெறும் காவடி உற்சவமும், கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு தினத்தன்று நடைபெறும் சந்தனக்காப்பு வைபவமும் இத்தலத்தில் விசேஷ திருவிழாக்களாகும்.

தினசரி இத்தலத்தில் ஒரு கால பூஜையே பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பகல் 12 மணிக்கு நடைபெறும். உச்சிக்கால பூஜை சிறப்புத் தரிசனமாகக் கூறப்படுகிறது.

காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணியளவில் சூலத்தீர்த்தத்தில் நீராடி 11 மணியிலிருந்து 12 மணிக்குள் ஸ்ரீ காலபைரவரை தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒருசேரக் கிடைக்குமாம். அது மட்டுமல்ல, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ரோசம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டுமாம்.

மழலைச் செல்வம் வேண்டுவோர் 16 ஞாயிற்றுக்கிழமை மேற்கூறியவாறு நீராடி ஸ்ரீ காலபைரவரை வழிபட்டால் கைமேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

Similar News