ஆன்மிகம்

எதிரிகள் தொல்லை, துன்பங்கள் அகற்றும் சரபேஸ்வரர்

Published On 2017-03-15 05:44 GMT   |   Update On 2017-03-15 05:44 GMT
அசல தீபேஸ்வரர் கோவிலில், உள்ள சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.
சிவதலங்களில் பெரும்பாலும் சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களே அதிகம். ஆனால் சிவன் மேற்கு நோக்கியும், அன்னை கிழக்கு நோக்கியும் வீற்றிருக்கும் தலம் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அசல தீபேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகன் அருள்பாலிக்கிறார். எனவே இந்தத் தலம் சோமாஸ்கந்தர் திருத்தலமாகவும் விளங்குகிறது.

இந்தக் கோவில் சிவன் சன்னிதியில் சிறப்பு கருவறை முன்பு உள்ள அசல தீபம் எப்போதும் ஆடாது, அசையாது இருக்கும். எனவே அசையாத தீபம் கொண்ட சிவன், ‘அசல தீபேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகச்சிறப்பாகும். திருவண்ணாமலை பரணி தீபத்திற்கு வித்திட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.

அசல தீபேஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் சன்னிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய பயம், உடல் பிணி, எதிரிகள் தொல்லை நீங்கும்.



வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, கல்வி அறிவு, வீடு யோகம், காரிய வெற்றி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு காலத்தில் எலுமிச்சம் பழ மாலை, செவ்வரளி பூ, வடை மாலை சாத்துதல், அன்னதானம் செய்தல், பால், தயிர், இளநீர் போன்ற பூஜைகள் மற்றும் ஹோமம் செய்வது சிறப்பானது.

சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் சரபர் 30-வது மூர்த்தம் ஆகும். இவரது பாதி சரீரம் விலங்கினங்களிலேயே பயங்கர சக்தி படைத்த யாளியாகவும், பாதி சரீரம் பறவைகளிலேயே மிக சக்தி படைத்த சரபட்சியாகவும் அமைந்திருக்கும்.

இவருக்கு அதிரசம் படைத்து தானம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல நட்பு, நல்ல குணங்கள் வளர்வதுடன், இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். ஞாயிறு சந்திர ஓரை பூஜையில் 4.30 மணி முதல் 6 மணி வரை பசும்பால் அபிஷேகம் செய்து வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சிக்கலாம். உடையாத அரிசி மணிகளை சந்தன காப்பில் பதித்து வழிபடலாம். வெண் பட்டு சாத்தி, தேங்காய் சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். இவ்வாறு செய்தால் மனதில் நிம்மதி உண்டாகும். வெண் குஷ்டம் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஞாயிறு ராகு காலத்தில் சனி ஓரை சேருகின்ற போது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்தன காப்பு அலங்காரத்தில், சந்தனத்தில் புணுகு, பன்னீர் கலந்த அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் மீதான வீண் பழிகள், இடையூறுகள் அகலும். மேலும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, துர்க்கா தேவி, நரசிம்மர் ஆகிய 4 பேரும் ஒருசேர சரபேஸ்வரர் உருவத்தில் அருள்பாலிப்பதால் இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜை பிரசித்தி பெற்றதாகும்.

நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், பரமத்திவேலூரில் இருந்து கிழக்கில் 17 கிலோமீட்டர் தொலைவிலும், காட்டுப்புத்தூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், கரூர் மாவட்டம், வாங்கலில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூரில் இந்த தலம் அமைந்துள்ளது.

Similar News