ஆன்மிகம்

திருமண தடை, நாகதோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீக்கும் நாகேஸ்வரசுவாமி

Published On 2017-02-25 08:41 GMT   |   Update On 2017-02-25 08:40 GMT
நாகதோஷம் முதலான அனைத்து தோஷங்கள், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் வையப்பமலை கோவிலில் வந்து பிரார்த்தித்தால் அனைத்தும் கைகூடுமாம்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் உள்ளது வையப்பமலை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பெரியமணலியில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசிவகாமி அம்பிகை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே பாப்பாத்தி என்னும் ஒரு பெண்மணி, கணவரை இழந்து தனியே வாழ்ந்து வந்தாள். தீவிர சிவபக்தி கொண்டிருந்த பாப்பாத்தி, தினமும் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது வழக்கம். இவளது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஒருநாள் அவளுக்குத் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல வரலாறு.

தன் பக்தைக்குக் காட்சி தந்தபோது, நாகம் ஒன்று சந்நிதியின் லிங்கத் திருமேனியில் இருந்து வெளியே வந்து, பிறகு மீண்டும் சந்நிதிக்குச் சென்று, லிங்கத் திருமேனியைச் சுற்றியபடி காட்சி தந்ததாம். எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்கின்றனர்.



ஸ்ரீநாகேஸ்வரர் எனத் திருநாமம் கொண்டு, அருளாட்சி செய்யும் தலம் இது. எனவே, இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாகதோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடுமாம். மேலும் இந்தத் தலத்தில் திருமணம் செய்து கொண்டால், கணவனும் மனைவியும் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் சிறப்புற வாழ்வார்களாம்.

இங்கு ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீகல்யாண சுப்ரமணியர் மற்றும் சூரிய - சந்திரர்கள் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

மகாசிவராத்திரி நன்னாளில், இரவில் நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனருளைப் பெறுவதற்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் முதலான பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுத் தவிப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அல்லல்படுபவர்கள், குடும்பத்தில் கருத்துவேறுபாடுகளால் கதிகலங்கிக் கதறுபவர்கள் ஆகியோர், மகாசிவராத்திரி திருநாளில் இங்கு வந்து சிவனாரை வழிபட, விரைவில் அனைத்து நலனையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

மகாசிவராத்திரி பூஜையில் பங்கேற்று ஸ்ரீநாகேஸ்வரரைத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

Similar News