ஆன்மிகம்

கடன் தொல்லை, திருமணத்தடை தீர நரசிம்மருக்கு தீப வழிபாடு

Published On 2017-02-02 08:19 GMT   |   Update On 2017-02-02 08:19 GMT
திருமணத்தடை, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கிரி குடியில் உள்ள நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

“நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை’ என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

மனநிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.
இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது. உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

Similar News