ஆன்மிகம்

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி

Published On 2016-09-08 10:04 IST   |   Update On 2016-09-08 10:04:00 IST
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி நேற்று நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 44-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, துறவற சபைகள் விழா, இளைஞர்கள் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை விழா, ஆசிரியர்கள் விழா, நலம்பெரும் விழா என்ற தலைப்புகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

இந்தநிலையில் நேற்று பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆடம்பர கூட்டு திருப்பலி நடத்தி தேர் பவனியை தொடங்கிவைத்தார்.

தேர் பவனி பெசன்ட் நகர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’, ‘மரியே வாழ்க’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் வழியாக சென்ற தேர் பவனி மீண்டும் ஆலயத்தை அடைந்தது.



முன்னதாக, அன்னை தெரசா புனிதர் பட்டம் பெற்றதையொட்டி, அவருடைய உருவச்சிலை ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டது. அந்த சிலையை சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்துவைத்தார்.

விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை முதல் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. காலை 7.45 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அன்னைக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது.

மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது. நன்றி திருப்பலியை திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா நடத்துகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News