ஆன்மிகம்

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-08-30 07:40 IST   |   Update On 2016-08-30 07:40:00 IST
பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 44-வது ஆண்டு திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அன்னையின் திருஉருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீளம் உள்ள கொடி பக்தர்கள் மத்தியில் திருப்பவனியாக கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் வேளாங்கண்ணி அன்னையின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மலர் தூவி ‘மரியே வாழ்க’, ‘மரியே வாழ்க’ என கோஷம் எழுப்பினர்.

கொடியேற்றத்தை காண்பதற்காக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே பாதயாத்திரையாக திருத்தலத்துக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கு வழிநெடுக உணவு பொட்டலங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தேவ அழைத்தல் விழாவாக நெசப்பாக்கம் பங்கு தந்தை பி.ஜே.லாரன்ஸ் ராஜ் அடிகளார் தலைமையிலும், நாளை புதன்கிழமை உழைப்பாளர் விழா போரூர் பங்குதந்தை என்.ஏ.சார்ல்ஸ் குமார், கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஏ.எல்.செபாஸ்டின் தலைமையிலும் நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 1-ந் தேதி துறவற சபைகள் விழாவாகவும், 2-ந் தேதி இளைஞர்கள் விழாவாகவும், 3-ந் தேதி பக்த சபைகள் விழா சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையிலும், 4-ந் தேதி நற்கருணை பெருவிழா திருவள்ளூர், சென்னை- மயிலை உயர்மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையிலும், 5-ந் தேதி ஆசிரியர்கள் விழா ஆர்.ஏ.புரம் பங்குதந்தை பி.எஸ்.காணிக்கைராஜ், எருக்கஞ்சேரி பங்குதந்தை பி.அந்தோணி தலைமையிலும் நடைபெறுகிறது.

6-ந் தேதி நலம் பெறும் விழா திருவொற்றியூர் பங்குதந்தை எல்.பால்ராஜ், அண்ணாநகர் பங்குதந்தை ஏ.தாமஸ் தலைமையிலும், 7-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. தேர்பவனிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்குகிறார்.

8-ந் தேதி அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா மற்றும் அன்னைக்கு முடிசூட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமை தாங்குகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News