ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

சீமோன் கண்ட அற்புதம்

Published On 2022-05-21 07:42 GMT   |   Update On 2022-05-21 07:42 GMT
இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
‘கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்’ (லூக்கா 11:9) என்ற வசனமானது, இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் உறுதியான மற்றும் உண்மையான வாக்குத் தத்தங்களில் ஒன்றாகும். இந்த வசனத்திற்கு உதாரணமாக லூக்கா எழுதிய நற்செய்தியில் ‘கேட்ட’தால் ஒருவர் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திரளான மக்கள் இறைவார்த்தையை கேட்பதற்காக அவரிடம் வந்தனர். அந்த நேரத்தில் கரையோரமாக இரண்டு படகுகள் நின்று கொண்டிருந்தது. மீனவர்கள் சிலர் அந்த படகுகளில் இருந்து இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட இயேசு அருகிருந்த ஒரு படகில் ஏறி, அதைச் சற்றே தள்ளும்படி கூறினார். படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு இறைவார்த்தையை போதித்தார். அவர் அமர்ந்திருந்த அந்தப் படகு, சீமோன் என்பவருக்கு சொந்தமானது.

இயேசு இறைவார்த்தையை போதித்த பின்னர், சீமோனை நோக்கி, ‘‘ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.

உண்மையில் சீமோனும், அவரோடு இருந்தவர்களும் இரவு முழுவதும் மீன் பிடிக்க வலைகளை வீசியும், மீன்கள் ஒன்றும் வலையில் சிக்காமல் வெறுமையாய் திரும்பியிருந்தனர். இயேசு ‘உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்னதும், சீமோன் “ஐயா.. இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்கு சைகை காட்டி துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. (லூக்கா 5:1-7)

சீமோனுக்கு கடலும் புதிதல்ல, வலைவீசி மீன் பிடிப்பதும் புதிய விஷயமல்ல. ஆனாலும் அனுபவம் இல்லாத ஒருவர் (இயேசு), ‘மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்ன உடன், அவரின் வார்த்தையை கேட்டு சீமோன் ‘உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று சொல்லி வலைகளை வீசினார். அந்நேரத்தில் சீமோன் தன்னுடைய பல வருட மீன்பிடிக்கும் அனுபவத்தை பற்றியோ, திறமையை பற்றியோ சிந்திக்கவில்லை. அவர் செய்தது ஒன்றே ஒன்று தான்.

இயேசு சொன்னார்.. அதை அப்படியே சீமோன் கேட்டார். அந்த வார்த்தைகளின் படியே சீமோன் செயல்பட்டாா்.

ஆம், இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்டு, சீமோன் வலையை வீசினபடியால், இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் கிடைக்காத மீன்கள், சில நொடி பொழுதில் அவருடைய வலையில் வந்து சிக்கின. ஒரு படகில் இருந்த வலையின் மூலம் அவர் இரு படகுகள் நிறைய, அதுவும் அந்த படகுகள் மூழ்கும் நிலைக்கு வரத்தக்க வகையில் மீன்கள் கிடைக்கப் பெற்றார்.

இரவு முழுவதும் பாடுபட்டு வெறும் வலையோடு திரும்பிய சீமோன், இயேசுவிடம் ‘மீன் கிடைக்க அருள் செய்யும்’ என்று கேட்கவில்லை. ஆனால் இயேசு கூறியதை கேட்டு அதன்படி செய்ததால்தான் நிறைவுக்கும் மேலான அற்புதத்தை பெற்றுக் கொண்டார். இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்ததால்தான் சீமோனின் வெறுமை, வளமையாய் மாறியது.

இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். சீமோனை பின்பற்றி, நாமும் விவிலியத்தின் வழியாக இயேசு கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்தால், சீமோன் போலவே நாமும் வாய் திறக்காமலேயே, நம்முடைய எதிர்பார்ப்புக்கும், நிறைவுக்கும் மேலான, நிரம்பத்தக்க ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். தன்னுடைய செவிகளால் இயேசு சொன்னதை ‘கேட்ட’ சீமோன், தனது நாவினால் இயேசுவிடம் தனது தேவையை குறித்து எதுவும் ‘கேட்க’வில்லை. எனவே நீங்களும் கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர் (லூக்கா 11:10).


Tags:    

Similar News