ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

அறிவு கூர்மை உடையவர்களாக மாறுங்கள்..

Published On 2022-04-20 06:56 GMT   |   Update On 2022-04-20 06:56 GMT
கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
குழந்தாய் இளமை முதல் நற்பயிற்சியை தேர்ந்து கொள். முதுமையிலும் ஞானம் பெறுவாய்(சீராக் 6:18)

கல்லூரிதான் ஒரு மனிதன் மரியாதை உணர்வோடும், உண்மையோடும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் இடம். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் நீங்கள் ஒரு குழந்தை அல்ல. மாறாக நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதர். ஏராளமான நல்லவற்றை நீங்களும் கற்று கொண்டு பரந்து பட்ட இவ்வுலகில் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி எடுக்கும் மாபெரும் தளம். உங்கள் பொறுப்பு மிகப்பெரியது என்பதை உங்களுக்கு உணர்த்துகின்ற இடம். உங்கள் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்களை பொறுத்து அமைந்திருக்கிறது என்று எடுத்து சொல்லுகின்ற இடம்.

பள்ளியில் பயின்ற காலத்தை காட்டிலும், கல்லூரியில் உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் பலரும் உங்களை நம்பி இருக்கின்றனர். உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பற்றி எத்தனையோ கனவுகளை வளர்த்து கொண்டிருக்கூடும். அவை அனைத்தையுமே நனவாக்க மன உறுதியையும் கல்லூரியிலிருந்து நீங்கள் பெற்று கொள்கிறீர்கள்.

கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள். வீணாக பொழுது போக்காதீர்கள். உங்கள் வாழ்வில் நெருக்கடியான பருவம் இது என்பதை உணர்ந்திருங்கள். உள்ளத்தில் உறுதியான தீர்மானமும், விழிப்புணர்வும் கொண்டு தொடர்ந்து வாழ்வில் முதிர்ச்சி பெற்றவர்களாக உருமாறுங்கள்.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி அலைய வேண்டியது இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு அறிவு கூர்மை உடையவர்களாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உருவாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் கொண்டிருங்கள்.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News