ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன?

Update: 2022-04-10 00:30 GMT
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும்.
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வு இந்த ஆண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறாக நினைவுகொள்ளப்படுகிறது. இந்த குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன? என்பது குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம்.

வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுகின்றனர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும் போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார். அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும் பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். மேலும் இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர்.

இப்படியாக வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்த மக்கள் இன்னும் சில நாட்களில் இவரை சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள் என்று சொல்லப்போவது இயேசுவுக்கு தெரிந்தும் அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததினால் தான் மக்கள் பிதாவை பார்த்து வேண்டிக்கொள்ளும் வார்த்தையாகவும், பிதாவே இயேசுவை இந்த சிலுவை பாடுகளில் இருந்து விடுவியும் என்றும் சொல்வதைத் தான் ஓசன்னா என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் இயேசுவானவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய வாரம் நடைபெறுகிறது.

அந்த நாட்களில் எருசலேம் மக்கள் ஒலிவமலை குருத்து இலைகளை கையில் ஏந்தி இயேசுவை வரவேற்றது போல, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பனையில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து அதை சிலுவையாக வடிவமைத்து கைகளில் ஏந்தியபடி, அவரை புகழ்ந்து பாடல்களை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி, வீதியாக சென்று இயேசுவை நினைவுகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது. எனவே இந்த நாட்களில் இயேசுவின் பாடுகளில் எவ்வளவு பரிசுத்தம் நிறைந்துள்ளது என்பதை நினைவுகூர்ந்து, மீண்டுமாய் நமக்காக அவர் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூற ஆயத்தமாவோம் ஆமென்.

சகோதரி. கேத்ரின், திருப்பூர்.
Tags:    

Similar News