ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

நாம் வழிதவறி வாழ்வதை அறிவதில்லை

Published On 2022-04-08 05:55 GMT   |   Update On 2022-04-08 05:55 GMT
வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
வரி வசூலிப்பவர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்து கிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்.

‘‘இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார்.

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்’’ என்றார்.

நாம் ஒவ்வொருவரும் வழிதவறி உலகில் வாழ்வதை அறிந்து, மனம் மாறவேண்டும். நம்மை நல்வழிபடுத்தவும், நம்முடைய மனம் மாற்றத்தை விண்ணுலகில் கொண்டாடவும் இறைமகன் தயாராக இருக்கிறார் என்பதையே, இந்த உவமைச்செய்தி நமக்கு கற்பிக்கிறது.

இந்த உவமையை இருமுறை இயேசு கூறினார். இயேசு வாழ்ந்த கப்பர்நாகும் நகருக்கு வரும்வழியில், சீடர்கள் தம்மில் யார் பெரியவர் என்று வாதாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, மிகச் சிறிவராகிய தம் சீடர்களை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டுக் கூறினார். இரண்டாம் முறை, யூதேயா, பெரேயா பகுதியில் மனம் மாறிய பாவிகளை வழிதவறிய ஆட்டுக்கு ஒப்பிட்டார்.

இயேசு ஆட்டை உவமையாகச் சொல்வது ஏன்?

செம்மறி ஆடுகளில் ஏதோ ஒன்று வழிதவறிவிட்டால் அதனால் அமைதியாக தொடர்ந்து மேய முடியாது. அது தடுமாறும். சத்தமிட்டவாறு அங்கும் இங்கும் ஆயரைத் தேடி அலையும். ஆயரின் சத்தத்திற்காக ஏங்கும். ஆயரைக் காணும்வரை அது நிலைகொள்ளாது.

ஆனால், ஆற்றிவுடைய மனிதர்களாகிய நாம் வழிதவறி வாழ்வதை அறிவதில்லை. நம் உள்ளம் நம் தவறை மறைப்பதால், நம்மை நேர்மையாளர் என்றே எண்ணுகிறோம். மேலும், நாம் அனைவரும் நம்மை வழிதவறிய ஆடு என்று பாவ அறிக்கை செய்தாலும், நம்மில் பலர் வழிதவறி வாழ்வதையே விரும்புகிறோம்.

இயேசுவின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும், வரி வசூலிப்பவரும், பாவிகளும் வழிதவறியதை அறிந்த ஓர் ஆடாக இருந்தார்கள். பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் தாங்கள் வழிதவறியதை அறியாத 99 ஆடுகளாக இருந்தார்கள். இந்த உவமையை இன்றைக்கு, நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம். வழிதவறி சென்ற நம்மை, கண்டுபிடிக்கவும், நம்முடைய மனம் மாறுதலை ஏற்று நம்மை கொண்டாடவும், விண்ணுலகம் தயாராக இருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா..? என்ற கேள்விக்கு விடைதேடுங்கள்.
Tags:    

Similar News