ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சிலுவை பயணம்

கருங்கல் புனித கருணை மாதா மலையில் சிலுவை பயணம் அடுத்த மாதம் 15-ந்தேதி நடக்கிறது

Update: 2022-03-31 04:33 GMT
புனித வெள்ளியையொட்டி சிலுவை பயணம் ஏப்ரல் 15-ந் தேதி நடக்கிறது. இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள்.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவை பயணம் திருசடங்குகள் நடைபெறும்.

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் புனித வெள்ளியன்று புனித கருணை மாதா மலையில் உள்ள தியான மையத்திற்கு சிலுவை பயணம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 42-வது சிலுவை பயணம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி புனித வெள்ளியன்று நடக்கிறது.

அன்று காலை 7 மணிக்கு ஆலய வளாகத்தில் பிலாத்து இயேசுவை தீர்ப்பிடும் நிகழ்ச்சியுடன் சிலுவை பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து இந்த பயணம் அருகில் உள்ள புனித சவேரியார் ஆலயம், கருங்கல் பஸ் நிலையம், நிர்மலா மருத்துவமனை ரோடு திருப்பு, நிர்மலா மருத்துவமனை, சிந்தன்விளை கருணை மாதா மலை குருசடி வழியாக சென்று கருணை மாதா மலை உச்சியில் அமைந்துள்ள தியான மையத்தை அடைகிறது. அங்கு சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசுவின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுடன் பயணம் நிறைவுபெறும்.

இந்த பயணத்தின் போது இயேசுவின் சிலுவை பாதையில் உள்ள 14 நிகழ்வுகளையும் கலைஞர்கள் சிலுவை சுமந்தபடி தத்ரூபமாக நடித்து காட்டியபடி செல்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொள்வார்கள்.

இந்த சிலுவை பயணம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பங்கு பணியாளர் மரிய அற்புதம் தலைமையில் ஆலய வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் பங்கு உதவி அருட்பணியாளர் ஜஸ்டின் கிறிஸ்துராஜ், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் ஜான் ராஜேந்திரன், செயலாளர் பெட்ரோமல், பொருளாளர் பவுல் தாஸ், துணைச் செயலாளர் வெர்ஜின் ஜெனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News