ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

தவக்கால சிந்தனை: வாழ்வில் துணிச்சல் வேண்டும்

Published On 2022-03-18 09:29 IST   |   Update On 2022-03-18 09:29:00 IST
நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம்.
‘ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் எவராவது இந்த மலையை பார்த்து பெயர்ந்து கடலில் விழு என தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்’ (மாற்கு 11:22-23)

மனித வாழ்க்கை என்பது எண்ணற்ற சவால்களால் நிறைந்திருக்கிறது. வாழ்க்கை நாம் துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மாறி வரும் இந்த உலக சூழலில் ஏராளமான இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். துணிச்சல் ஒரு மனிதனை உள்ளத்தில் இருந்து இயக்குகின்ற சக்தி படைத்தது. நாம் கொண்ட தொழிலுக்காகவும், மதிப்புக்காகவும் நம்மை போராடுமாறு நம்மைத் தூண்டுவது துணிச்சலே ஆகும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதை சந்தித்துதான் ஆகவேண்டும். பிறந்தவுடன் ஒரு மனிதன் வாழ வேண்டிய நோக்கங்களுள் தள்ளப்படுகிறான். பல அறிவு காரியங்களை படைப்பதற்கும், தமது இலக்குகளை, லட்சியங்களை வடிவமைத்து கொள்வதற்கும் நமக்கு தேவையானது துணிச்சல். விஞ்ஞானிகளும் சுதந்திர போராளிகளும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் துணிச்சலே உதவி செய்திருக்கிறது என்று அவர்களே சான்று பகர்ந்திருக்கிறார்கள்.

எனவே நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம். சமூக தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வாழ்வில் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் சமத்துவம் நிலைபெற நாம் போராட வேண்டும். இதை உள்ளத்தில் ஏந்தியவர்களாக இந்த நாளில் தொடர்ந்து வாழ்வதற்கு பழகுவோம்.

-அருட்பணியாளர் குருசு கார்மல்,

மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

Similar News