ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கடவுளை வணங்குங்கள், அவர் மேன்மைப்படுத்துவார்

கடவுளை வணங்குங்கள், அவர் மேன்மைப்படுத்துவார்

Published On 2022-01-11 04:54 GMT   |   Update On 2022-01-11 04:54 GMT
நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார்.
மேதியனாகிய தாரியு என்பவர் அரசராய் இருந்த போது, அவருக்கு கீழ் வரி வசூலிப்போருக்கு மேற்பார்வையாளராக தானியேல் பணியாற்றினார். அவர் நேர்மையாகவும் உத்தமமாகவும் பணி செய்தால், அவரிடம் அரசின் முழு பொறுப்பையும் ஒப்படைக்க அரசர் விரும்பினார். அதை கேள்விப்பட்ட மற்ற மேற்பார்வையாளர்களும், வரி வசூலிப்போர்களும் தானியேல் மீது பொறமை கொண்டனர். அதோடு தானியேல் பற்றி அரசரிடம் குறை சொல்வதற்கான காரணத்தைத் தேடினர்.

ஆனால் தானியேல் தன்னுடைய பணியில் நேர்மையாக செயல்பட்டதால், மற்றவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே அவர்கள் “ தானியேல் கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் உறுதியானவர். அந்த சட்டத்தை வைத்து அவர் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர் மீது குற்றம் காண முடியாது” என்றார்கள்.

அதனால் அவர்கள் அரசரிடம் வந்து “முப்பது நாள் வரையில் அரசராகிய உங்களைத் தவிர, வேறெந்த தெய்வத்திடமோ, மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றி தடையுத்தரவு போடவேண்டும்” என்று வலியுறுத்தினர். அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டு உத்தரவு பிறப்பித்தான்.

நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக மண்டியிட்டு மன்றாடி, அவருக்கு நன்றி செலுத்துவது தானியேலின் வழக்கம். அவர் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்று, மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருக்க, முழந்தாளிலிருந்து மன்றாடி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

அவரை குற்றப்படுத்த வகை தேடிக் கொண்டிருந்த மனிதர்கள், முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, தானியேலின் அறையின் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். அதையே காரணம்காட்டி அரசரிடம் சொல்லி அவரை சிங்கக் குகையில் தள்ளினார்கள். அரசருக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், மற்றவா்களின் வலியுறுத்தலால் ஒப்புக்கொண்டார்.

தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்படும் முன்பு, அரசர் அவரிடம், “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றார். அதுமட்டுமல்ல சிங்கக் குகையில் தானியேல் இருந்த அந்த இரவு நேரத்தில் அரசனால் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. பொழுது விடிந்தவுடன் குகை நோக்கி விரைந்து வந்த அவர், உரத்த குரலில், “தானியேல்! என்றும் உள்ள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னை சிங்கங்களிடம் இருந்து விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

அதற்குத் தானியேல், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே!” என்று மறுமொழி கொடுத்தார்.

இதன் வழியாக தானியேல் தன்னுடைய தேவன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டிலும், அரசன் தானியேலின் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். குகையில் பசியுடன் இருந்த சிங்கங்களின் நடுவில் தானியேல் நிம்மதியாகவும், மனநிறைவுடன் இருந்தபோதும், அரண்மனையில் இருந்த அரசனால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘தானியேலை இறைவன் காப்பாரா?, இல்லையா?’ என்ற கவலையுடன், உண்ணவோ, உறங்கவோ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் பொழுது விடிந்ததும், குகை நோக்கி விரைந்து வந்து தானியேல் நலமாக இருப்பதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

தானியேல் இறைவனின் முன்பு உத்தமாய் நடந்து கொண்டபடியால் அவரை சிங்கத்தின் வாய்க்கு தப்புவித்த தேவன், தாமே தானியேல் வழியாக தம்முடைய மகிமையை அரசருக்கும் வெளிப்படுத்தினார்.

அப்பொழுது தாரியு அரசர், நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும், நாட்டினருக்கும், மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தார். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இருக்காது. தானியேலை சிங்கங்களின் பிடியில் இருந்து காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!" என்று தேவனை அனைவர் முன்பும் உயர்த்தி அவரது நமது நாமத்தை மகிமைப்படுத்தினார்.

நாம் செய்யும் செயல்கள் யாவும், எப்போதும் மற்றவர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் எப்போது தவறு செய்வோம், எந்த வகையில் நம்மை சிக்க வைக்கலாம் என்று சிலர் காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார். அதன் வழியாக நம்மோடு அவர் இருப்பதை அவர்களும் அறியும்படி செய்கிறார்.

நாமும் தானியேலை போல உலகக் காரியங்களிலும், தேவனுடைய காரியங்களிலும் நேர்மையாய் நடப்பதன் மூலம், நம்முடைய பெயர் மட்டுமல்ல, தேவனுடைய பெயரும் மகிமைப்படும் என்பதை உணர்ந்து, எல்லாவற்றிலும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
Tags:    

Similar News