ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம்

Published On 2021-12-15 04:18 GMT   |   Update On 2021-12-15 04:18 GMT
பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.

‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.

இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)

நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.

எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
Tags:    

Similar News