ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

தோல்வி வெற்றியாய் மாறும்...

Published On 2021-12-14 04:12 GMT   |   Update On 2021-12-14 04:12 GMT
நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.
“என் தேவன் தம்முடைய ஐசுவரி யத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).

ஆண்டவர் மகிமையில் ஐசுவரியமுள்ளவர். அவர் உங்களுடைய குறைகளை எல்லாம் மாற்றி, அவைகளை நிறைவாக்குவார். சிங்கக்குட்டிகள் ஒரு வேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கலாம். ஆனால் ஆண்டவரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.

கானாவூர் திருமண வீட்டிலே திராட்சை ரசம் இல்லாத ஒரு குறைவு வந்தது. திராட்சை ரசம் இல்லை என்றால் அங்கே சந்தோஷமில்லை. அந்த திருமண வீட்டில் குழப்பங்களும், மனதுயரங்களும் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் ஆண்டவரிடம் வந்தபோது, அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி அந்த குறையை நிறைவாக்கினார்.

தண்ணீர் அற்புதமான ருசியுள்ள திராட்சை ரசமாய் மாறியது. அந்த வீட்டு சொந்தக்காரர் ஏற்கனவே கொடுத்த திராட்சை ரசத்தைவிட, ஆண்டவர் கொடுத்த திராட்சை ரசமே மிக மேன் மையாக இருந்தது.

உங்கள் வாழ்க்கையிலும் பல குறைவுகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்யும்போது நிச்சயமாகவே உங்கள் குறைவுகளை நிறைவாக்கி ஆசீர்வதிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.

“உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும்” (ஏசா. 60:20).

வேதாகமத்திலே அன்னாள் என்ற ஒரு பெண்ணுக்கு பிள்ளையில்லாத ஒரு துக்கமிருந்தது. ஆனால் அவள் ஒரு நாள் ஆண்டவருடைய பாதத்திற்கு வந்தாள். அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே தன்னுடைய குறையை நிறைவாக்குவார், தன் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று விசுவாசித்தாள். அப்படியே ஆண்டவர் ஆசீர்வாதமான சாமுவேலையும், இன்னும் ஐந்து குழந்தைகளையும் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார்.

இஸ்ரவேல் தேசத்திலுள்ள ஒரு சிறிய ஆயி பட்டணத்தை பிடிக்க முடியாமல் யோசுவாவும், வீரர்களும் தோல்வியடைந்தார்கள். அப்போது, யோசுவா தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு முகங்குப்புற விழுந்து கதறினார். ஆண்டவர் அந்த கண்ணீரைக் கண்டார். தோல்வியின் காரணம் ஒரு ஆகான் என்பதை வெளிப்படுத்தினார். அந்த ஆகானை இஸ்ரவேலர் பாளயத்திலிருந்து அப்புறப்படுத்தி சுட்டெரித்தபோது, ஆண்டவர் அந்த தோல்வியை ஜெயமாய் மாறப்பண்ணினார். அதன் பின்பு யோசுவா ஆயி பட்டணத் தை மட்டுமல்ல, முழு கானானையும் சுதந்தரித்துக் கொண்டார்.

பிரியமானவர்களே, குறைவு நேரமானாலும் சரி, துக்கத்தின் நேரமானாலும் சரி, தோல்வியின் நேரமானாலும் சரி, உங்களை நீங்களே ஆராய்ந்துப் பார்த்து, தடைகளை அப்புறப்படுத்தி தேவனோடு ஒப்புரவாகி விடுங்கள். உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளும்போது, உங்களுடைய தோல்வி ஜெயமாய் மாறும். நீங்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடும்போது, உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும்போது, உங்கள் குறைவுகள் எல்லாம் நிறைவாக மாறும்.

“உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).

போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
Tags:    

Similar News