ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

வீடுகட்டிய அறிவாளியும்... அறிவிலியும்...

Published On 2021-12-10 04:28 GMT   |   Update On 2021-12-10 04:28 GMT
மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும்.
கலிலேயாவில், மலைப்பொழிவில் இயேசு கூறியது. ‘‘நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?, உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிற எவரும், யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டு நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும், அடித்தளம் இல்லாமல் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது. இவ்வாறு பேரழிவு நேர்ந்தது’’ என கூறி, அதன் வழியாக நற்செய்தியை அறிவித்தார்.

இந்த நற்செய்தி நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நாம் அனைவரும் ‘இறையாட்சிக்காக வாழ்கிறோமா..?, இல்லை வெளிவேடத்திற்காக வாழ்கிறோமா..?’ என்பதுதான் அது. அதேபோல இந்த உவமையில் அடித்தளம் இல்லாமல் மணல்மீது வீட்டைக் கட்டியவர் யார்?, இயேசுவை அறியாதவர்களா?, இயேசுவின் நற்செய்தியைக் கேட்காதவர்களா?, இல்லை. நற்செய்தியைக் கேட்டும், கேட்காமல் இருப்பவர்களை குறித்தே இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போவதும், நற்செய்தியைப் பற்றி பேசுவதும், இறைவனைப் போற்றிப் புகழ்வதும், சடங்குகளைக் கைக்கொள்வதும் நம் முடைய பழக்கமாக இருக்கலாம். ஆனால் அது இறையாட்சிக்கான வாழ்க்கையாக கருதப்படுவதில்லை. மாறாக, நற்செய்தியின்படி வாழ்வதும், நல்ல காரியங்களில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுமே, இயேசுவுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுமே, நம்மை இறையாட்சிக்குள் அழைத்து செல்லும்.

கிறிஸ்தவர்களாகிய நம்மிடமே அன்பு, பரிவு, இரக்கம் போன்ற தூய ஆவியின் கனிகள் இல்லை. நம் உலக வாழ்வு ஆழமாகத் தோண்டாமல், மேலோட்டமாக, மணல்மேல் கட்டப்பட்ட வீடாகவே இருக்கிறது. நாம் வெளிவேடக்காரர் என்பதை அறியாமல், மீட்கப்பட்டவர்கள் என்றும் இறையாட்சியைப் பெற்றவர்கள் என்றும் நம்பி உலகில் வாழ்கிறோம்.

நாம் கட்டிய வீடு (நம்முடைய வாழ்க்கை) மிகச் சிறந்த வீடாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இறையாட்சிக்கு முன்பாக பலமிழந்து, பேரழிவை சந்திக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வாறு மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும். இல்லையேல், புயல் வேளையில் (தீர்ப்பு நாட்களில்) ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை, என்பதை இயேசு சுருக்கமாக, அழகாக விளக்கியிருக்கிறார்.
Tags:    

Similar News