ஆன்மிகம்
பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்த போது எடுத்த படம்.

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அறிவிப்பு விழா

Published On 2021-09-08 04:40 GMT   |   Update On 2021-09-08 04:40 GMT
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அறிவிப்பு விழாவையொட்டி மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பசிலிக்காவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா முளகுமூட்டில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நேற்று முன்தினம் எளிமையாக நடந்தது. மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

பசிலிக்கா கொடியை முளகுமூட்டின் முதல் பங்குதந்தை விக்டர் பணியாற்றிய குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் இருந்து அருட்பணியாளர்களால் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பசிலிக்கா கொடியை ஏற்றி வைத்தார். பசிலிக்காவின் அறிவிப்பு ஆணை மற்றும் பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியம் ஆகியவற்றை மறைமாவட்ட நிர்வாகிகள், வட்டார முதல்வர் மற்றும் பங்குத்தந்தை இணைந்து பீடத்திற்கு கொண்டு வந்தனர்.

லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பாணையை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் படித்தார். அறிவிப்பாணையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் படித்தார்.

பசிலிக்காவின் அடையாள சின்னமான ஆம்பூரியத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து வைத்தார்கள்.

தொடர்ந்து மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பலி நிறைவில் முல்லை தொடர்பு இதழை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசுரெத்தினம் வெளியிட்டார். முளகுமூடு அன்னையின் புகழ் பாடும் நிறைமதியே என்ற இசை சி.டி.யை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால் ராஜ் வெளியிட்டார்.

முளகுமூட்டின் முதல் பங்கு தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் வெளியிட்டார். விழாவில் குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல் ராஜ், பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டார முதல்வர் ராஜேந்திரன், முன்னாள் பங்குத்தந்தை வில்லியம் மற்றும் பல அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பசிலிக்கா பங்குத்தந்தை டோமினிக் கடாட்ச தாஸ், இணை பங்குத்தந்தை தாமஸ், அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின், பங்குப்பேரவை துணை தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, துணை செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜிகலா, பங்குப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பசிலிக்கா உருவாக்கல் குழு உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

விழாவில் நேற்று காலை முதல் திருவிருந்து திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடந்தது. மாலை திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமையில் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேர்ப்பவனி நடைபெறவில்லை. ஆனால் இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு ஆலய வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News