ஆன்மிகம்
புனித அந்தோணியார்

புனித பதுவை அந்தோணியார்

Published On 2020-11-11 07:02 GMT   |   Update On 2020-11-11 07:02 GMT
அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும், ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார்.
நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார். இவர் ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பெர்தினாந்து ஆகும்.
 
அந்தோணியார் லிஸ்பன் மறைமாவட்ட பாடசாலையில் கல்வி கற்றார். குழந்தைப் பருவத்தில் படிப்பிலும், ஒழுக்கத்திலும், கூரிய நுண்ணறிவிலும் சிறந்து விளங்கினார். இறைபற்றும், ஞானமும் மிகுந்தவராகக் காணப்பட்டார்.  தினந்தோறும் தவறாமல் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நீண்ட நேரம் இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் ஆர்வமாகச் செயல்பட்டார். திருப்பலியில் பீடசிறுவனாக பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தர்.

ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.
 
அந்தோணியார் உலகை வெறுத்து ஒரு துறவியாக மாறத் தீர்மானித்தார். தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்தார். தினந்தோறும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்று நல்கினார். இறைபாதத்தில் அமர்ந்து இறையன்பை நிறைவாகப்பெற்று சான்று பகிர்ந்தவர். கி.பி.1219ஆம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். பிரான்சிஸ் அசிசியாரின் துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையில் 1220ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் சேர்ந்தார். பெர்தினாந்து என்னும் இயற்பெயருக்குப் பதிலாக அந்தோணியார் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் அந்தோணியாரை மிகவும் கவர்ந்தன.

ஒருநாள் இரவு அந்தோணியார் தமது அறையில் வெகுநேரம் கண்விழித்து செபித்துக் கொண்டிருந்தார்.  விவிலியத்தைத் திறந்து வைத்திருந்தார். திடீரென பேரொளி அந்த அறையை நிரப்பியது. குழந்தை இயேசு விவிலியத்தின் மேல் நின்று அந்தோணியாரின் கழுத்தைக் கட்டித் தழுவினார். அந்தோணியார் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். விண்ணகம் இந்த மண்ணுலகில் உண்டானது போல் உணர்ந்தார். புனிதர் குழந்தை இயேசுவைத் தனது மார்போடு சேர்த்து அரவணைத்து  முத்தமிட்டார்.  அந்தோணியார் பேரானந்த நிலையில் மெய்மறந்து நின்றார். குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்றவர். இதை திர்சோ என்பவர் நேரில் கண்டு சான்று கூறினார்.
 
அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும்,  ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறைவனின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். இவரது வெற்றியின் இரகசியம் தாழ்ச்சியே. தம் சகோதரர்கள் முன்பாக தாழ்ச்சியோடு எளிமையாகவே வாழ விரும்பினார். ஏழ்மையில் எப்பொழுதும் மகிழ்ந்திருந்தார். நான் ஆண்டவரைப் பார்க்கிறேன்; ஆண்டவர் என்னை வாஞ்சையோடு உற்றுபார்கிறார்; அவரின் இரக்கம் நிறைவாக என்னில் பொழிகின்றது; நான் அவரிடம் செல்ல ஆவலோடு இருக்கிறேன். இறைவனிடம் செபித்தவாறே 1231ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று தமது 36ஆம் வயதில் இயற்கை எய்தினார். 
Tags:    

Similar News