ஆன்மிகம்
மோசேயுடன் பேசிய கடவுள்

மோசேயுடன் பேசிய கடவுள்

Published On 2020-11-10 07:57 GMT   |   Update On 2020-11-10 07:57 GMT
உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.
‘இஸ்ரவேலர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களை எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் செல்லும் கலகக்காரனாக மோசே மாறக்கூடும்’ என்று பயந்தான், பார்வோன் மன்னன். அதனால் மோசேயைக் கண்டுபிடித்து, கொல்லும்படி ஆணையிட்டான். உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்கள், பெண்கள் எனப் பலரும், ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்ததை மோசே கண்டார். மோசே மந்தைகளை மேய்த்தவர் இல்லை என்றாலும், அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் குலத்தொழிலாக மேய்ப்புத் தொழிலே இருந்ததால், அங்கே மேய்ப்பர்களையும் கனிவான முகங்களைக் கொண்ட பெண்களையும் கண்ட அவரது மனதில் நிம்மதியும் அமைதியும் உண்டானது. அவர் இளைப்பாறுவதற்காக அங்கே இருந்த கிணற்றருகே சென்றார். அப்பகுதியில் இருந்த ஒரே கிணறு அது.

அங்கே பிரதான மேய்ப்பனாகவும், பல நூறு குடும்பங்களுக்குத் தலைமை மதகுருவாகவும் இருந்தார் எத்திரோ. அவருக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் தங்களது கிடைகளை மேய்த்துப் பேணிக் காத்துவந்தனர். மோசே கிணற்றருகே சென்றபோது அப்பெண்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பி தங்களது ஆடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே வந்து சேர்ந்த சில ஆண் மேய்ப்பர்கள், அப்பெண்களை மிரட்டிக் கிணற்றை விட்டு அகன்று செல்லுமாறு பயங்காட்டினார்கள்.

இதனால் அச்சமடைந்த அவர்கள் கலக்கமுற்று நகர, அவர்களைத் தடுத்து நிறுத்தினார், உயிருக்குப் பயந்து ஓடிவந்த மோசே. “வீணாகப் பயம் காட்டுகிறவர்களை நினைத்து அஞ்சத் தேவையில்லை” என்று நம்பிக்கை தந்த அவர், அவர்களது ஆடுகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். “வாட்டசாட்டமான இந்த ஆண்மகன் யார்? எளிதில் மிரண்டுபோகும் இப்பெண்களுக்கு அரணாக இருக்கட்டும் என்று எகிப்திலிருந்து எத்திரோவால் தருவிக்கப்பட்டிருப்பானோ?” என்று முணுமுணுத்தவாறு அந்த ஆண் மேய்ப்பர்கள் பின்வாங்கினர்.

பிறகு ஆடுகளுடன் கூடாரத்துக்குத் திரும்பிய பெண்கள், தந்தையிடம் ஓடிச் சென்று தங்களுக்கு உதவிய எகிப்திய மனிதனைப் பற்றிக் கூறினார்கள். எத்திரோ தன் மகளிரிடம் “அம்மனிதர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? அவரைப் போய் அழையுங்கள், நம்மோடு அவர் உணவருந்தட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோசே அவர்களது கூடாரத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவரை வரவேற்ற எத்திரோ “அடைக்கலம் தேடும் உம் கண்களில் அமைதி உண்டாகட்டும். எங்களோடு நீர் இங்கே தங்கிவிடும்” என்று கூறி ஆதரவு தந்தார்.

அப்பகுதியின் தலைமை குரு தனக்குக் காட்டிய தயவைக் கண்டு, மோசே அவர்களோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தார். நாட்கள் எரிநட்சத்திரங்களைப்போல் வீழ்ந்தன. எத்திரோ தன் மூத்த மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்துவைத்தார். மோசே, சிப்போராள் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டனர்.

மாமனாரின் குடும்பத்துக்கு நன்றியுள்ள மருமகனாக, அவர்களது மந்தைகளை திறம்படக் காத்து பெருக்கி வந்தார், மோசே. பொதுவாகவே வெயிலால் வாடிவந்த மீதியான் நாட்டை, கோடைக்காலம் மேலும் வாட்டியது. காய்ந்த புற்களும் கூட இல்லாமல் ஆடுகள் பசியால் வாடுவதை மோசேவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே ஆடுகளுக்குத் தேவையான புல்லைத் தேடி, கண்களுக்குப் பசுஞ்சோலையாகக் காட்சியளித்த ஓரேப் மலைக்கு தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார். ஆடுகள் வயிறாரப் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்டு மோசேயின் மனம் நிறைந்தது. அந்த சமயத்தில் அங்கே அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. பசுமையான செடிகள் சூழ்ந்த புதர் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. பெரும் தீயாக அது இருந்தாலும், அப்புதரில் இருந்த செடிகளும், இலைகளும், பூக்களும் நெருப்பால் கருகிப்போகாமல் அப்படியே இருந்தன.

‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று அதிசயித்தவாறே, எரியும் புதர் அருகே சென்று கவனித்தார் மோசே.

அவர் புதரின் அருகில் சென்றபோது அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “மோசே.. அங்கேயே நில். நெருப்பின் அருகில் வராதே. உன் பாதணிகளைக் கழற்றி வை. ஏனென்றால் நீ நிற்கிற இந்த இடம் புனிதமானது.” ஒரு வானதூதன் மூலமாகக் கடவுள், மோசேயுடன் பேசினார். அப்போது மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார்.

கடவுள் தொடர்ந்து பேசினார் “எகிப்தில் என் மக்கள் படுகிற துன்பத்தைக் கண்டேன். அவர்களை நான் விடுவிக்கப்போகிறேன். என் மக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வர நான் உன்னைத்தான் அனுப்பப் போகிறேன்” என்றார். மோசே மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். கடவுளிட்ட பணியை செய்ய ஆயத்தமானது அவரது கண்களில் தெரிந்தது.
Tags:    

Similar News