பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
கல்லறை திருநாளையொட்டி நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மிக தந்தையர்கள் கலந்துகொண்டு கல்லறை திருநாள் திருப்பலியை நிறைவேற்றினர். திருப்பலிக்கு பின் பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட்தந்தை லூர்துசேவியரின் கல்லறைக்கு சென்று கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.
மேலும் பூண்டி மாதா பேராலய பூங்கா பகுதியில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறையிலும் புனிதம் செய்து வழிபாடு நடைபெற்றது. சிறப்பு திருப்பலியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கைகளை தூய்மை செய்து பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் பூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் கல்லறைகளை அருட்தந்தையர்கள் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்தினர்.
மைகேல்பட்டி, பூதலூர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களிலும் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.