ஆன்மிகம்
இயேசு

போராட்டமே வாழ்க்கை

Published On 2020-06-18 09:15 GMT   |   Update On 2020-06-18 09:15 GMT
ஒரு சவால் பிரச்சனை நமது கண்முன் நிற்கிற போது அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்வின் வெற்றி தோல்வி அமைகிறது.
ஒரு சவால் பிரச்சனை நமது கண்முன் நிற்கிற போது அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்வின் வெற்றி தோல்வி அமைகிறது. மனித வாழ்வே சவால் நிறைந்தது தான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வை தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்து போராடியே தன்னை தக்க வைத்து கொண்டது. கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், விஷப்பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்து யுத்தம் நடந்தன.

சவால்களை, நெருக்கடிகளை கண்டு பயந்து ஓடுவதல்ல வாழ்க்கை. மாறாக அவற்றோடு போட்டிப்போட்ட வாழ்வதிலே உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்திருவோம். வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர். சவாலை சந்திப்பது என்று முடிவெடுத்து விட்டால், அதில் எப்படியும் வெற்றியினை எட்டிப்பிடித்திட முடியும்.

இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் கத்தோலிக்க திரு அவையின் தொடக்க கால வரலாறுகளை ஆய்வு செய்கிற போது பல்வேறு சிக்கல்கள், வேதனைகள், குழப்பங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலே கிறிஸ்தவம் பிறப்பெடுத்து பல மனிதர்களின் உயிர்தியாகங்களும், ஒப்புயர்வற்ற சிந்தனை திறன்களுமே கிறிஸ்துவத்திற்கான களத்தினை இம்மண்ணில் பிறப்பெடுக்க செய்தது. இதையே எல்லா சமயங்களில் வரலாற்றிலும் நாம் கண்டுணர முடியும். போராட்டங்களோடு தான் தனது இருப்பை பல்வேறு சமயங்கள், உலகத்தில் உறுதி செய்திருக்கிறது.

இயேசுவின் துன்பகரமான பாடுகளே, ஏராளமான மனிதர்களுக்கு வாழ்வினை உறுதி செய்து கொடுத்தது. துன்பத்தின் வழியாகவே வாழ்வும், மீட்பும் உண்டு என்பதை மிக அழுத்தமாய் பதிவு செய்தார். இன்று மனிதர்களாககிய நாம் ஒவ்வொருவருமே அத்தகைய மனப்பான்மையோடு வாழ்வினை எதிர்கொள்வதற்கு அழைக்கப்படுகிறோம். மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார். அவரின் பார்வையில் இருந்து அவை மறைந்திருப்பது இல்லை. மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவன் ஒளிபோல் அவர் முன் தெளிவாய் தொடங்குகின்றன. அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்(சீராக்17:15,19). இதனை முழுதாய அறிந்து வாழ்வினை எதிர்கொள்ள நாம் தொடங்குகிற போது அனைத்தையும் சமநிலையோடு நாம்மால் அணுக இயலும். போராட்ட வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்போம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News