ஆன்மிகம்
கிறிஸ்துமஸ் பண்டிகை

அன்பை உணர்த்தும் கிறிஸ்துமஸ் பண்டிகை

Published On 2019-12-25 02:42 GMT   |   Update On 2019-12-25 02:42 GMT
இயேசுவின் பிறப்பு அவர் நம் மீது வைத்திருக்கும் பேரன்பை குறிக்கிறது. அன்பை உணர்த்துவதே கிறிஸ்துமஸ் பண்டிகை.
எதிர்பார்ப்பு இல்லாத இயேசுவின் அன்பு

உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள். அந்த அன்பில் எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஒன்று எதிர்பார்த்தே அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் இயேசுவின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு, நம்மை இந்த உலகத்தின் பாவத்தில் இருந்து மீட்க வந்து தன் உயிரை கொடுத்த உன்னத அன்பு, மக்கள் பாவத்தை தண்ணீர் போல குடித்து பாதாளத்தை நோக்கி கொண்டு இருக்கையில் அதில் இருந்து மீட்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு சேர்க்க வந்த பாச அன்பு.

எல்லோரிடமும் இயேசு அன்பு உள்ளவர்

இயேசுவின் பிறப்பு கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது. ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பார். இதோ கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். இயேசு மனுகுலத்தில் மேல் வைத்த மாபெரும் அன்பின் நிமித்தம் நேற்றும், இன்றும், என்றுமே நம்மோடு கூடவே இருக்கிறார். கஷ்ட நேரங்களில் உடன் இருப்பவர்கள் விலகி சென்று விடுவார்கள். ஆனால் நமக்காய் பிறந்த இயேசு எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு விலகுவதில்லை, கைவிடுவதுமில்லை. இயேசு குறிப்பிட்ட மதத்திற்காக மாத்திரம் வரவில்லை. மானிட மக்கள் எல்லோருக்காகவும் இயேசு இந்த உலகில் வந்து பிறந்தார்.

இயேசுவிடம் அன்பாய் இருங்கள்

பொதுவாக டிசம்பர் மாதத்திற்கு இன்னொரு பெயர் உள்ளது Joy of Giving. இந்த நாளில் ஏழை-எளிய மக்களுக்கு துணி மற்றும் பல பரிசுகளை கொடுத்து அன்பை வெளிபடுத்துகிறார்கள். கேக், போனஸ், கேரல்ஸ் மற்றும் தங்கள் பரிசுகளை பரிமாறி கொண்டு அன்பை வெளிப்படுத்தி சந்தோஷப்படுவார்கள். இவைகள் தவறல்ல. இது உலகிற்கு ஏற்ற அன்பு, இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பெரியதான காரியம், அதிகமாய் நாம் தேவன் மீது அன்பு கூற வேண்டும். தேவன் அன்பாக இருப்பது போன்று நாமும் அன்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவனிடம் அன்பாக இருந்தால் அவர் வார்த்தைகளை கைக்கொள்ளுவோம். இப்படி நானம் காணப்பட்டால் அவரை (இயேசு) நாம் தரிசிக்க முடியும்.

நான்சி ஜோஸ்வா
Tags:    

Similar News