ஆன்மிகம்
கிறிஸ்துமஸ்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்.

Published On 2019-12-24 08:07 GMT   |   Update On 2019-12-24 08:07 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல உலக மக்களும் கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகை ரட்சிக்க இறைமகன் இயேசு மனிதனாய் பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று புதிதாக பிறந்திருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ, அதே அளவு மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் அன்றும் கிறிஸ்தவ மக்களிடம் காணப்படும்.

இயேசுவின் பிறப்பை கிறிஸ்தவர்கள் மீட்பர் பிறந்துள்ளார் என்று கூறுவார்கள். மீட்பர் என்பதற்கு அர்த்தம், நம்மை மீட்க வந்தவர் என்பதாகும்.

எதில் இருந்து நம்மை மீட்க வந்தார்? என்று கேட்டால், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோரை, புறக்கணிக்கப் பட்டவர்களை மீட்க வந்தவர்தான் இயேசு என்று இறை வல்லுனர்கள் கூறுவார்கள்.

இதை உணர்த்துவதற்கு தான் இயேசு பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுக்கொட்டிலில் ஏழை தம்பதியான சூசை-மரியாவுக்கு குழந்தையாக பிறந்தார்.

இயேசு பிறந்த செய்தியும் முதலில் ஆடு மேய்ப்பவர்களுக்கே தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தான் இயேசு பிறந்ததும், பெத்லகேம் சென்று அவரை முதன் முதலாக தரிசித்தவர்கள்.

அதன் பிறகு தான் கீழை நாட்டு அறிஞர்கள் வருவார்கள். அவர்கள் இயேசு பிறந்த செய்தியை கீழ் திசை நாடுகளுக்கு எல்லாம் அறிவிப்பார்கள். அந்த அறிவிப்பில் மனுமகன் பிறந்துள்ளார். அவர் தான் இந்த உலகை ரட்சிக்க வந்த மெசியா எனக்கூறுவார்கள்.

இயேசுவின் பிறப்பு உலகுக்கு தெரியவந்த பிறகு அவர் உலக மக்களால் மெசியா என அழைக்கப்பட்டார். இயேசு வளரும் போது உலக மக்களிடம் அன்பையும், சமாதானத்தையும் போதித்தார்.

அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். பொறாமையும், கோபமும் வாழ்க்கையை அழித்துவிடும் என்பதை எடுத்து கூறினார்.

உன் சகோதரனுக்கு என்ன செய்கிறாயோ, அதுவே உனக்கும் கிடைக்கும் என்று எடுத்துரைத்தார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று தாழ்ச்சியை போதித்தார்.

இந்த போதனைகனை பின்பற்றி வாழ்ந்தவர்கள் வாழ்வில் உயர்வை சந்தித்தார்கள். போதனைகளை ஏற்க மறுத்தவர்கள் வாழ்வின் சோதனைகளை அனுபவித்தார்கள்.

இப்போது எப்படி இயேசுவின் போதனைகளை கடைப்பிடிப்பது என்பதற்கும் இயேசு அன்றே பல உதாரணங்களை கூறியுள்ளார்.

நீ ஒரு ஏழை சகோதரனுக்கு உதவி செய்தால், அதனை எனக்கே செய்ததாய் நினைத்து நான் அதனை ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

எனவே தான் அண்டை, அயலாருக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

ஏழை சிறுவனின் கல்விக்கு உதவுவது, பசியால் துடிக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பது, வழி தெரியாமல் தவிக்கும் ஒருவருக்கு வழி காட்டுவது, வாழ்க்கையில் போராடும் ஒருவரை கைதூக்கி விடுவது போன்றவையே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

இதைதான் உலக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், அது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எனவும் இறைநூல் கூறுகிறது.

இதனால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் கிறிஸ்தவர்கள் அண்டை, அயலாருக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல உலக மக்களும் கடைபிடிக்க வேண்டும்.

இதை தான் இயேசு விரும்பினார். இதற்காக தான் அவர் மனுமகனாய் இம்மண்ணுலகில் பிறந்தார்.

இந்தியாவில் மார்கழி மாதம் பனி கொட்டும் நேரத்தில் இயேசு பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறது.

இதற்காக இன்று நடு இரவில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இதில் பங்கேற்கும் மக்கள் இயேசுவின் பிறப்பை அதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டாட வேண்டும் என்று உலக கிறிஸ்தவர்களின் தலைவர் போப்பாண்டவர் கூறியுள்ளார். மேலை நாடுகளில் இந்த பண்டிகை டிசம்பர் மாதம் தொடங்கியதுமே ஆரம்பமாகிவிடும்.

மனுமகன் இயேசுவை வரவேற்று பாடும் பாடல்களுடன் கிறிஸ்தவர்கள் ஊரை சுற்றி வருவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன் வீடு, வீடாக சென்று கிறிஸ்துவின் பிறப்பையும், அவர் எதற்காக பிறந்தார் என்பதையும் கூறிசெல்வார்கள். வீடுகளுக்கு செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவார்கள். மின் விளக்கு அலங்காரத்தில் ஊரே ஜொலிக்கும். வீடுகளிலும் மக்கள் ஸ்டார்கள் கட்டி மகிழ்வார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளில் குடில்களும் கட்டப்படும்.

இயேசு இங்கு பிறந்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டவே இவ்வாறு குடில்கள் கட்டப்படுகின்றன. இந்த குடில்கள் மூலம் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் மக்கள், அவர் நமக்கு விட்டு சென்ற அன்பையும், சமாதானத்தையும், பின்பற்ற வேண்டும் என்பதே மறைநூல் அறிஞர்களின் விருப்பம். கிறிஸ்துமஸ் நாளன்று இதனை வலியுறுத்தும் விதத்தில் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும். அதில் புத்தாடை அணிந்து பங்கேற்கும் மக்கள், இயேசுவின் போதனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவார்கள்.

கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும்

இந்த நாள் உலக மக்களுக்கு மீட்பளிக்கும் நாளாக மாறாட்டும்.

கிறிஸ்து பிறப்பு விழா உலகில் அனைத்து மக்களும் நிறம், சாதி, மதம், இனம், மொழி கடந்து அன்பு செய்யும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்க கூறும் விழா. நாமும் அடுத்திருப்போரை பேதங்களையும், பிரிவினைகளையும் கடந்து அன்பு செய்யும்போது மட்டுமே அவரின் பிள்ளைகள் என்பதையும் உணர்த்தும் விழா. இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா நமக்கும் நம் நாட்டுக்கும் அமைதியோடு கூடிய ஆசியை அருள்வதாக. அன்பையும், சமாதானத்தையும்

வலியுறுத்தும் கிறிஸ்துமஸ் ஒப்புதலுக்கு

Tags:    

Similar News