ஆன்மிகம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

Published On 2019-12-24 05:24 GMT   |   Update On 2019-12-24 05:24 GMT
கிறிஸ்துவர்களால் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் இந்தப் பண்டிகையானது கோலாகாலமாகக் கொண்டாடப்படுகின்றன.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமசாகும். கிறிஸ்துவர்களால் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் இந்தப் பண்டிகையானது கோலாகாலமாகக் கொண்டாடப்படுகின்றன. மதம், இனம், மொழி கடந்து அனைத்து மக்களாலும் இப்பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

மணாலி: மலைவாசஸ்தலமான மணாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியச் சிறப்பாக பனி மூடிய மரங்கள், மலைகள், புல்வெளிகள், நடைபாதைகள், வீடுகள், உணவு விடுதிகள் என அனைத்தையுமே சொல்லலாம். ஒவ்வொரு டிசம்பர் மாதமும் மணாலிக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது எனப்புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணாலியின் பனிமூடிய வெள்ளைக் கிறிஸ்துமசை கொண்டாட வருகிறார்கள். ஒவ்வொரு தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளின் வாயில்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் நம்மை வரவேற்கிறார். உணவகங்களில் ஹிமாச்சல பிரதேசத்தின் சிறப்பான உணவு வகைகள் மற்றும் வேறு பல பொருட்களும் வழங்கப்படுகின்றன. உணவுடன், திருவிழா மனநிலைக்கு பார்வையாளர்களை இமாச்சல குழு நாட்டுப்புற இசையானது இசைக்கப்பட்டு மகிழ்ச்சியான மனநிலைக்கு இழுத்துச் செல்கின்றது. அதேபோல் தங்கும் விடுதிகளிலும் மென்மையான கரோல் இசையைக் கேட்டுக் கொண்டும், சூடான சாக்லேட்டுகளை சாப்பிட்டுக் கொண்டும், விடுதிகளின் வெளியில் நெருப்பானது மூட்டப்பட்டு அதைச் சுற்றி அமர்ந்து மக்கள் பாடுவதையும் குளிர்ச்சியையும் அனுபவித்துக் கொண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனிப்பந்துகளைச் செய்து ஒருவர் மேல் ஒருவர் வீசியெறிந்து விளையாடுவதையும், மணாலியல் மகிழ்ச்சியாக ரசிக்க முடியும். பனியின் குளிர்ச்சியானது மிக அதிகமாக இருந்தாலும் ஊர் முழுவதும் எல்லா இடங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் அதிக அளவிலான உற்சாகத்தை பார்க்க முடிகின்றது.

ஊர் முழுவதும் உள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் மட்டுமல்லாது சிறு செடிகளும் பனியால் போர்த்தப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் உற்சாகமாக வரவேற்கின்றன.

கோவா: சிறந்த கடற்கரைகள் மட்டுமல்லாது கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கும் மிகச்சிறப்பான இடமான கோவாவைச் சொல்லலாம். இங்கிருக்கும் போர்த்துக்கீசிய மரபு மற்றும் கத்தோலிக்க மக்கள் தொகையே கிறிஸ்துமஸ் உற்சாகமாகக் கொண்டாடப்டுவதற்கான காரணமாகும். தேவாலயங்கள் மற்றும் வீடுகள் அழகான விளக்குகள் மற்றும் பாயின்செட்டியா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கரோலை இரவு நேரத்தில் பாடுகிறார்கள். அனைத்து வயதினரும் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்க வரிசையில் நிற்பதைப் பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் பிறக்கும் இரவானது ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் ஆடிப்பாடிச் செல்ல அவர்களைத் தொடர்ந்து பெரும்பாலானவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது மிகவும் பிரபலம். எனவே அதைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகிறார்கள்.

பாண்டிச்சேரி: தமிழ்நாடு கடற்கரையில் சற்று தொலைவில் உள்ள கண்கவர் சிறிய யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி “லிட்டில் பிரான்ஸ்” என்று அழைக்கப்படுகின்றது. பிரெஞ்சு வம்சா வளியினர் இங்கு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைத்து பாரம்பரிய சடங்குகளோடும் கொண்டாடப்படுகின்றன.

இங்கிருக்கும் தேவாலயங்கள், குறிப்பாக சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப் இம்மாகுலேட் கான்செப்சன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் புனித இதய தேவாலயமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது மிகவும் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. இந்தியாவில் மிக அழகாக அலங்கரிக்கப்படும் தேவாலயங்களில் இவையும் அடங்கும். நள்ளிரவு பிரார்த்தனைக்காக முழு நகரமும் இங்கு கூடுகின்றன. மேலும் கடற்கரையில் மக்கள் கூடி உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

மும்பை: கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களுமே இங்கு கிறிஸ்துமஸைக் கொண்டாடத் தயாராகி விடுகிறாகள் என்றே சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களும், வண்ண விளக்குகளும் அலங்கரிக்ப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

கிறிஸ்துமஸ் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை வீட்டிற்குள் வைத்து அலங்கரிக்கப்பதோடு அவற்றைப் பார்க்கவும் உறவினர்கள் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தினரையும் அழைக்கிறார்கள்.

பிளம் கேக்குகள், குக்கிஸ் மற்றும் பலவிதமான க்ரீம் கேக்குகளானது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. குஷ்வர், கிடியோ நியூரியோ மற்றும் இனிப்பு முறுக்குகள், நேந்திரம் பழ சிப்ஸ்களானது வீடுகளில் செய்யப்படுகின்றன.

வான்கோழி பிரியாணி, சிக்கன் வறுவல் போன்றவை கட்டாயம் கிறிஸ்துவ இல்லங்களில் கிறிஸ்துமஸ் அன்று செய்யப்படும் உணவாகும். தேவாலயங்கள் மட்டுமல்லாது அனைத்து வணிக வளாகங்களிலும் மிகப்பெரிய உயரமான கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களானது மிகவும் அழகாகவும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுவது அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.
Tags:    

Similar News