ஆன்மிகம்
தண்டையார்பேட்டையில் புதிய தூய யோவான் திருத்தூதர் ஆலயம்

தண்டையார்பேட்டையில் புதிய தூய யோவான் திருத்தூதர் ஆலயம்

Published On 2019-12-23 09:03 IST   |   Update On 2019-12-23 09:03:00 IST
தண்டையார்பேட்டையில் புதிய தூய யோவான் திருத்தூதர் ஆலயத்தை சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையேற்று புதிய எழில்மிகு ஆலயத்தை பிரதிஷ்டை செய்து திறந்துவைத்தார்.
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் 1965-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி தூய யோவான் திருத்தூதர், நற்செய்தியாளர் ஆலயம் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில் சேவை செய்வதற்காக வந்த அன்னை தெரசா முதல் மையத்தை இந்த ஆலய வளாகத்தில் திறக்க இடம் கொடுத்தனர். இந்த இடத்தில் தான் அன்னை தெரசா தங்கி இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து வந்தார்.

இந்த நிலையில் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இடித்துவிட்டு பிரமாண்டமாக புதிய ஆலயத்தை கட்டும் முயற்சியை ஆலய பங்கு தந்தை எச்.ஜோ பாலா மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உதவி மூலம் ஆலயம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி தொடங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் அளித்த உதவியினாலும், தொழிலாளர்களின் உழைப்பினாலும் தற்போது ஆலயம் கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையேற்று புதிய எழில்மிகு ஆலயத்தை பிரதிஷ்டை செய்து திறந்துவைத்தார். பின்னர், ஆலய மணி மற்றும் கொடி மரத்தையும் பிரதிஷ்டை செய்தார். அதனைத் தொடர்ந்து ஆலய திருப்பலி நடந்தது. இதில் சபை நிர்வாகிகள் எஸ்.இதய பென்சிகர், கிளிப்பர்டு உள்பட சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News