ஆன்மிகம்
இனி உங்கள் வாழ்வில்...

இனி உங்கள் வாழ்வில்...

Published On 2019-11-29 04:45 GMT   |   Update On 2019-11-29 04:45 GMT
‘இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 32:15).
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை மிகுந்த அன்புடன் வாழ்த்துகிறேன். நம் தேவன் நல்லவர். இம்மட்டும் நடத்தின தேவன் இனியும் நம் குடும்பங்களை நடத்த வல்லவராக இருக்கிறார்.

‘உன் துக்கநாட்கள் முடிந்துபோம்’ (ஏசாயா 60:20).

மேற்கண்ட வாக்குத்தத்தங்களின்படி உங்கள் துக்க நாட்களெல்லாம் முடிந்து போகப்போகிறது. நீங்கள் பலவிதமான வேதனைகள் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். என் வேதனைகள் என்று மாறும்? என துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே! சகோதரியே! நிச்சயமாகவே முடிவு உண்டு, உங்கள் நம்பிக்கை வீண்போகாது.

உங்கள் துக்க நாட்களை தேவன் மாற்றி உங்களை நிச்சயம் சந்தோஷப்படுத்துவார். அப்படி உங்கள் துக்கம் மாறும் போது, இனி உங்கள் வாழ்வில் சம்பவிக்கிற காரியங்களைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

‘இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்’ (ஏசாயா 30:19)

அன்னாள் வாழ்விலே ஒரு பக்கம் குழந்தையில்லையே என்கிற துக்கம், மறுபக்கம் குடும்பத்தினரின் நிந்தையான பேச்சுகள். இவற்றின் மத்தியிலே துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த அன்னாள் தேவ சமுகத்திலே சென்று தன் இருதய பாரங்களை ஊற்றிவிட்டபோது வேதம் சொல்லுகிறது.

‘அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை’ (1 சாமுவேல்1:18).

அவள் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்டார், பிள்ளைகளைக் கொடுத்தார். அவளுடைய அழுகை நின்று விட்டது.

அழுகையின் பாதையிலே நடந்து கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, உங்கள் கண்ணீரையும் ஆண்டவர் பார்க்கிறார். தேவனை மாத்திரம் பற்றிக் கொள்ளுங்கள். இனி நீங்கள் அழுது கொண்டிருப்பதில்லை. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

‘ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை, இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை’ (ஏசாயா 29:22)

பலவிதமான நிந்தனைகளாலும், அவமானங்களினாலும் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு நிற்கிற உங்களைப் பார்த்து ஆண்டவர் சொல்லுகிற காரியம் என்ன தெரியுமா?, ‘இனி நீங்கள் வெட்கமடைவதில்லை. உங்கள் முகம் செத்துப் போவதுமில்லை. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’.

‘நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப் படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார், உன் தேசம் வாழ்க்கைப்படும்’ (ஏசாயா 62:4)

ஆகார் தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு வனாந்திரத்திலே அலைந்து திரிந்தபோது, கர்த்தரின் கண்கள் அவளைக் கண்டது. அவளுக்கென்று ஒரு நீரூற்றைத் திறந்து, அவளைக் கைவிடாத தேவன் உங்கள் பாரங்களை பார்க்கிறார். உங்கள் வேதனைகளை அறிகிறார்.

‘இனி நீங்கள் கைவிடப்படுவதில்லை, உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’.

‘இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்’ (வெளிப்படுத்தின விசேஷம் 22:3)

பலவிதமான சாபங்களினால், பரம்பரை சாபங்களினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசுவின் ரத்தத்தினால் உங்கள் சாபங்களையெல்லாம் கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றி உங்களை சந்தோஷப்படுத்தப் போகிறார்.

இனி உங்கள் குடும்பத்தில் ஒரு சாபமும் இருக்காது. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

‘இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 32:15).

வாடகை வீட்டிலே கஷ்டத்தோடு ஒருவேளை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம், எவ்வளவு சம்பாதித்தாலும் என்னால் ஒரு வீடு அல்லது நிலம் கூட வாங்க முடியாதபடிக்கு சம்பளம் முழுவதும் மருத்துவருக்கோ அல்லது கடனை அடைப்பதற்கோ போய்விடுகிறதே என துக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். தேவன் உங்கள் துக்கத்தை மாற்ற விரும்புகிறார். விசுவாசத்தோடு தேவனையே நோக்கிப் பாருங்கள்.

இனி உங்கள் வாழ்வில் வீடுகளும், நிலங்களும் கொள்ளப்படும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54
Tags:    

Similar News