ஆன்மிகம்
புனித சவேரியார்

கோவில்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-11-23 08:21 GMT   |   Update On 2019-11-23 08:21 GMT
கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆலயத்தை சுற்றி கொடி பவனியும், புனிதரின் மன்றாட்டு மாலையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு மேலமெஞ்ஞானபுரம் பங்கு பணியாளர் குழந்தைராஜ் தலைமை வகித்து திருக்கொடி ஏற்றினார். வீரவநல்லூர் பங்கு பணியாளர் ஞானதினகரன் மறையுரையாற்றினார்.

விழாவில், காமநாயக்கன் பட்டி ஆலயப் பங்கு தந்தையர்கள் அருள்ராஜ், அல்போன்ஸ் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு வண்டானம் முன்னாள் ஊராட்சி தலைவர் விசுவாசம் - சவரியம்மாள் குடும்பத்தினர் சார்பில் விருந்து நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறும். அதைத்தொடர்ந்து, 9-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருஜெபமாலை, திருப்பலி மற்றும் சப்பர பவனி நிகழ்ச்சி நடைபெறும். 10-ம் திருநாளான டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரடித் திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு திருபயணிகள் திருப்பலியும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் பங்கு பணியாளர் அருள்நேசமணி தலைமையில் திருஇருதயசபை அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள், கிறிஸ்தவர்கள், வெளியூர் வாழ் வண்டானம் கிறிஸ்தவர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News