ஆன்மிகம்
கோட்டார் புனித சவேரியார்

கோட்டார் சவேரியார் பேராலய பெருவிழா 24-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-11-04 03:55 GMT   |   Update On 2019-11-04 03:55 GMT
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மறை மாவட்டங்களில் ஒன்றாக கோட்டார் மறை மாவட்டம் உள்ளது. இதன் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.

இதே போல இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக கோட்டார் மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குதந்தை டோனி ஜெரோம் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:-

ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 3-ந் தேதி விழா நிறைவடைகிறது. பேராலய பெருவிழாவை அறிவிக்கவும், அறிமுகப்படுத்தவும் மற்றும் அழைப்பு விடுக்கவும் விழா பறை அறிவிப்பாக அதற்கு முந்தைய வாரம் கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதியன்று திருப்பலியை தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள் இணைந்து சிறப்பிக்கிறார்கள். அனைத்து திருப்பலிகளிலும் பங்குத்தந்தை திருவிழா அழைப்பை அறிவிப்பாக வாசிப்பார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு சிறிய கொடிமரம், பெரிய கொடிமரத்தின் மேல் ஏற்றப்படும்.

இதைத் தொடர்ந்து 24-ந் தேதி கொடியேற்று விழாவன்று காலை 6.15 மணிக்கு வழக்கம் போல ராஜாவூர் இறைமக்கள் திருப்பயணமாக வந்து திருப்பலியை சிறப்பிக்கிறார்கள். அன்றைய தினம் மாலை அருகுவிளை மற்றும் ராஜாவூர் பங்குமக்கள் திருப்பயணிகளாக வந்து கொடியேற்ற மற்றும் ஆலய அலங்காரத்துக்கு பூக்களை கொண்டு வந்து காணிக்கையாக்கி இறைவேண்டல் செய்வார்கள்.

மேலும் தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள் இணைந்து திருப்பயணிகளாக காணிக்கை பொருட்களை ஏந்தி வந்து “சந்திப்பு“ என்ற சிறப்பு நிகழ்வை நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ், மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி மற்றும் இணை பங்கு தந்தை டோனி ஜெரோம் ஆகியோரையும் கொடியேற்று விழாவை நடத்தித்தர இறைமக்கள் அழைப்பார்கள். தொடர்ந்து பவனியாக பேராலயத்துக்குள் சென்று கொடிகள் மந்திரிக்கப்பட்டு ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும்.

திருவிழாவின் 8 மற்றும் 9-ம் நாள் இரவு 10 மணிக்கு தேர்பவனி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவன்று காலை 11 மணிக்கு தேர் பவனி நடைபெறும். தேர்பவனியின் போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் தேவமாதா தேர்களுக்கு பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் விழாவின் சிறப்பம்சம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின் போது பங்குபேரவை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, இணை செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் செலூக்கஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News