ஆன்மிகம்
அன்புக்கு பொறாமையில்லை

அன்புக்கு பொறாமையில்லை

Published On 2019-10-12 03:54 GMT   |   Update On 2019-10-12 03:54 GMT
கர்த்தரை நம்புகிற நீங்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பொறாமையை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை விட்டுப் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் தாண்டி வேகமாக ஓடி கொண்டிருக்கிறது. காலை 8:10 மணி இருக்கும். இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயது இருக்கும். அழகான உடை, மடிக்கணினி, ஐ போன் என்று கம்பீரமாக தோற்றமளித்த அவர்கள் உயர் அதிகாரிகள் என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆகவில்லை. இருவரும் அலுவலக விஷயம் பேச ஆரம்பித்தார்கள்.

‘உனக்கு நேற்று நடந்தது தெரியுமா?’ என்றார் ஒருவர்.

‘ம், கேள்விப்பட்டேன்... நல்ல செய்தி தானே’ என்றான் இன்னொருவன்.

“எது நல்ல செய்தி, அந்த சின்னப்பயலுக்கு பதவி உயர்வு கிடைத்தது உனக்கு என்ன நல்ல செய்தியா?. உனக்கு தெரியாது, அவன் வேலை இல்லாம சுற்றித் திரிந்த போது பொழச்சு போட்டும் என்று நான் தான் நம்ம இடத்திலே வேலை வாங்கி கொடுத்தேன். இது நடந்து சுமார் 18 வருடம் இருக்கும். இன்னைக்கு அவன் எனக்கு மேல் அதிகாரியா வந்துட்டான். இனிமே அவன் அராஜகம் தாங்க முடியாது. அவன் வீடு, காரு எல்லாம் வாங்கி நமக்கு மேல போயிட்டான்”.

‘அவன் திறமைசாலி தானே’ என்றான் இதைகேட்டவன்.

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு, அவன் எப்படி அந்த பதவி உயர்வு வாங்கினான் என்று எனக்கு தான் தெரியும்” என்று முணுமுணுத்தான் மற்றவன்.

‘பொறாமை’ என்பது இது தானோ, என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் பொறாமை வருவது இயல்பு, அதை கையாளுவது எப்படி என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை விட வசதியில் குறைவாக உள்ளவர்களை பார்த்து நாம் பொறாமைப்படுவதில்லை. அதைப்போல நம்மை விட மிக அதிகமான உயரத்தில் இருப்பவர் களைப் பார்த்தும் பொதுவாக நாம் பொறாமைப்படுவதில்லை.

நம்மைவிட குறைவாக இருந்தவர், எப்பொழுது நம்மை தாண்டி செல்கிறாரோ அப்போது தான் நமது பொறாமை விஸ்வரூபம் எடுக்கிறது. பொறாமை என்பது சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஆன்மிக வாழ்வில் வேரூன்றிய சிலருக்கும் தலை விரித்தாடுகிறது என்றால் மிகையாகாது.

நாம் நம்முடைய நல்ல குணங்களை கண்டுகொள்ளாமல் மற்றவர்களுடைய சாதனைகளை நம்முடன் ஒப்பிட்டு பார்த்து நம்மை நாமே தாழ்த்திக்கொள் கிறோம். பொறாமை என்பது தம்மை தாமே அழிக்கும் பாவம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொறாமை உங்களை சோகத்தில் ஆழ்த்தி அழிக்கும் வல்லமை உள்ளது. ‘சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி’ என்கிறது நீதிமொழிகள் 14:30

சவுலின் வாழ்க்கை பொறாமைக்கு ஓர் உதாரணம். இஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். தாவீது எனும் வீரன் சவுலின் அரசவையில் அங்கம் வகித்தார். தாவீது, சவுலின் அரசவையில் படைத்தலைவனாகி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

தாவீது மாபெரும் வெற்றியாளனாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் ‘சவுல் ஆயிரம் பேரை கொன்றார், தாவீதோ பதினாயிரம் பேரை கொன்றார்’ என பாராட்டிப் பாடினார்கள்.

அதைக்கேட்டது முதல் சவுல் தாவீதின் மீது விரோதம் வளர்க்க தொடங்கினார். தாவீதை கொல்ல முயன்றார், ஆனால் தாவீதோ கடவுளின் கிருபையால் தப்பித்துக்கொண்டான்.

சவுல் தன் வாழ்க்கையை அரண் மனையில் தொடங்கி வனாந்தரத்தில் முடித்தான். ஆனால் தாவீதோ வனாந்தரத்தில் தொடங்கி அரண் மனையில் முடித்தான் என்கிறது வரலாறு.

உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே உணவும், உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம் என்கிறது 2 தீமோத்தேயு 6-ம் அதிகாரம்.

நாம் நம் வாழ்க்கையைப் பார்க்கும் போது தேவன் நமக்கு எவ்வளவு ஆசீர்வாதம் கொடுத்திருக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

உணவும் உடையும் மட்டுமா தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்?, அவர் கொடுத்த நன்மைகள் ஏராளம் ஏராளம். அப்படியிருந்தும் நாம் மற்றவர்கள் மேல் பொறாமை கொண்டால் அது கடவுளுக்கு வருத்தத்தையே கொடுக்கும்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்டவன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அதை நினைத்து நாம் மகிழ வேண்டும். உலகில் உன்னைப் போன்று வேறு ஒருவனும் இல்லை. உன்னைப்போன்ற ஒருவனை தேடினால் அது நீயாகத் தான் இருப்பாய்.

நீ உன்னைப்பற்றி நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ‘அன்புக்கு பொறாமையில்லை’ என்கிறது வேதம். அப்படியானால் கர்த்தரை நம்புகிற நீங்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பொறாமையை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

துலீப் தாமஸ், சென்னை.

Tags:    

Similar News