ஆன்மிகம்
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி நடைபெற்றபோது எடுத்தபடம்.

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி

Published On 2019-09-30 08:30 IST   |   Update On 2019-09-30 08:30:00 IST
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
தென் தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையும் பெருமையும் வாய்ந்தது திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் திருத்தலமாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் திருத்தலமாக்கப்பட்டது. இந்த திருத்தல 135-வது ஆண்டு திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் காலை ஜெபமாலை பவனியும், திருப்பலியும், மாலையில் ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையை பாளையங்கோட்டை குருகுல முதல்வர் சேவியர் டெரன்ஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலியை, தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மாலையில் திசையன்விளை நகர வீதிகளில் சப்பர பவனி நடந்தது. பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி முதலியவற்றை காணிக்கையாக செலுத்தினர். இந்துக்கள் தங்கள் வீட்டின் முன்பு கோலமிட்டு உப்பு, மிளகு கொடுத்து வரவேற்பு அளித்தனர். சப்பர பவனியில் ஞானதிரவியம் எம்.பி. உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவு நற்கருணை ஆசீர் நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை கொடியிறக்கமும், மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரெம்ஜிஸ் லியோன் மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர் செய்திருந்தனர்.

Similar News