ஆன்மிகம்
நல்ல எண்ணங்களை விதைப்போம்

நல்ல எண்ணங்களை விதைப்போம்

Published On 2019-09-26 03:41 GMT   |   Update On 2019-09-26 03:41 GMT
நேர்மறையான எண்ணங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான ஏராளமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்திடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் நமது வளர்ச்சிக்கு இடையூறாகவே அமைந்திடும்.
நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை எப்போதும் நல்லதையே தனி மனிதனுக்கு கொண்டு வந்த சேர்க்கும். இதனால் தனிமனிதன் சமுதாயத்திற்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் களம் இறங்குகிறான். எதிர்மறையான எண்ணங்களும் மிக எளிதாக அவரை விட்டு அகன்று போய்விடுகிறது.

புதிதாக காலணி வடிவமைத்த ஒரு நிறுவனம் தனது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலுள்ள கிராமம் ஒன்றிற்கு தனது ஒரு பணியாளரை அனுப்பி வைத்தது. சில நாட்கள் அங்கு தங்கியிருந்த அந்த பணியாளர் அந்த மக்களின் பாதங்களை பார்க்கிறார். யாருமே காலணி இதுவரை அணியவில்லை. எனவே விற்பனை செய்வது கடினம் என தீர்மானித்தவராய் அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார். நிறுவனம் வேறொரு பணியாளரை அங்கு அனுப்பி வைக்கிறது. அங்கு வந்த புதிய பணியாளர் மக்கள் அனைவரையும் ஒரு ஆலமரத்தின் அடியில் ஒன்று கூட்டுகிறார். காலணியின் பயன்பாடுகளையும், அதனது நன்மைகளையும் எடுத்துரைக்கிறார். விற்பனை மிக வேகமாக நடக்கிறது. எல்லாவற்றையும் குறிப்பிட்ட காலத்திற்குள் விற்று முடித்து விடுகிறார்.

நேர்மறையான சிந்தனை செய்து களத்தில் இறங்கும் போது ஏராளமான நல்ல மாற்றங்களை அறுவடை செய்கிறோம். உங்கள் எண்ணங்கள் உயர்ந்தவையாக இருக்கும் போது ஏராளமான பலன்களை நாம் பெற்றுக்கொள்கிறோம்.இயற்கையின் படைப்பில் எல்ல உயிர் இனங்களுக்கும் எல்லாம் நிறைவாகவே இருக்கிறது. ஆனால் சுயநல உணர்வுகளால் இன்று மனிதனின் எண்ணங்கள் மாசடைந்து விட்டன. எல்லாமே எனக்கு தான் வேண்டும் என்ற உணர்வோடு வாழ முற்படுகிறான். இதனை முற்றிலுமாக களைய வேண்டியது நமது மேலான கடமையாகும்.

நேர்மறையான எண்ணங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான ஏராளமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்திடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் நமது வளர்ச்சிக்கு இடையூறாகவே அமைந்திடும். ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றுவது நமது கரத்தினிலே மறைந்திருக்கிறது. இதனை உணர்ந்து செயல்பட பழகுவோம். அப்போது நமது வாழ்வு சிறப்புக்குரியதாய் வடிவம் பெறும். அதிகமாக நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி வாழ்க்கையை ஆனந்தப்படுத்துவோம்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News