ஆன்மிகம்
சுய கட்டுப்பாடு சாத்தியமா?

சுய கட்டுப்பாடு சாத்தியமா?

Published On 2019-09-25 04:01 GMT   |   Update On 2019-09-25 04:01 GMT
வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது. நல்ல பழக்க வழக்கங்களுடனும், இறைவனின் அருளுடனும் அதை எதிர்கொள்வோம்.
எங்கள் வீட்டின் அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் அவ்வப்போது நண்பர்கள் நாங்கள் கூடி பேசுவதுண்டு. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விஷயத்தை பற்றிப்பேசுவோம். ஒரு நாள் அரசியல் பற்றிய கருத்துக்கள் தீ போல பரிமாறப்படும். இன்னொரு நாள் அது நாங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை தேடும் களமாக அமையும். வேறு சில நாள் பிடிக்காத ஒரு நபரை பற்றிய பேச்சாக இருக்கும் அது.

அப்படியிருக்க ஒரு நாள் நண்பர் ஒருவர் டீக்கடையில் சோகத்துடன் காணப்பட்டார்.

‘என்ன ஆச்சு உனக்கு, எப்போதும் சிரித்துக்கொண்டே கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பாயே’ என்றேன்.

‘ஒன்னும் இல்லடா மச்சான், ஒரு கெட்டப்பழக்கம், அதான் யோசிச்சிட்டிருந்தேன்’.

‘என்னடா அது, அப்படி என்ன பண்ணிட்டே நீ’ என்றேன்.

‘புகை பழக்கத்தை விட முடியலடா’ என்றான்.

அவன் சொல்லி முடிக்கவும் இன்னொருவன், ‘எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தினமும் முகநூல் மற்றும் வாட்சப்பில் யாரையாவது வம்பிழுக்காமல் தூக்கம் வராது’ என்றான்.

மற்றொருவன், ‘என்னோட கெட்ட பழக்கம் என்னண்ணா, என் கொள்கைக்கு எதிராக இருக்கும் யாரையாவது எப்போதும் தவறாக நினைத்து வெறுப்பை வளர்த்துகொண்டு பிரச்சினை கொடுத்துகொண்டேயிருப்பேன்’ என்றான்.

இந்த பட்டியல் விரிவடைந்து கொண்டே இருந்தது. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அது தவறு என்று தெரிந்தும் விடுபட வழி தெரியவில்லை. அது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு தேட வேறு எங்கும் சென்று புலன்விசாரணை மேற்கொள்ளவேண்டியதில்லை, ஏனென்றால் பிரச்சினையே அவர்கள் தான். அவர்களுடைய அணுகுமுறையில் தான் மாற்றம் வேண்டும்.

‘தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப்பட்டணம்’ என்று வேதம் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:28)

சிம்சோன் ஒரு மாவீரனாக இருந்தும் சிற்றின்ப மோகத்தில் வீழ்ந்து வசீகரமான பெண்களிடம் எல்லாம் மனதை பறி கொடுத்தார். அவர் தன்னை நோக்கி சீறி பாய்ந்து வந்த சிங்கத்தை சாதாரணமாக கையால் அடித்து கொல்லும் அளவுக்கு அவர் வலிமை பெற்றிருந்தார்.

ஆனால் தனது மனதுக்குள் சீறிப்பாய்ந்து திரிந்த சிற்றின்பச் சிங்கத்தைக் கொல்லும் வலிமை அவரிடம் இருக்கவில்லை. அதனால் அவருடைய வாழ்க்கை மிக துயரமான ஒரு முடிவை சந்திக்கிறது.

‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். இச்சையானது பாவத்தை பிறப்பிக்கும், பாவம் மரணத்தை பிறப்பிக்கும்’ என்று யாக்கோபு நிருபத்தில் படிக்கிறோம்.

பெரும்பாலானோர் தங்களின் தீய செயல்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று சப்பைகட்டு கட்டுவார்கள். இல்லையென்றால் எல்லோரும் செய்யும் தவறு தானே என நினைப்பதுண்டு.

நம் பிரச்சினையை நாம் அடையாளம் கண்டுகொள்வது தன்னடக்கத்துக்கான முதல்படி. அது நமக்கு தீங்கானது என்று புரிந்து கொண்டால் நாம் இறைவனின் உதவியை நாடி தீர்வு காணலாம்.

ஆன்மிக வாழ்க்கையில் வளர வேண்டுமெனில் பழைய தீய பழக்கங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. எப்படி நாம் நம் வெளிப்படையான அழுக்கை போக்க தினமும் குளிக்கிறோமோ, அதைப் போல மனதில் உள்ள தீமையான காரியங்களை களைய தினமும் முயல வேண்டும்.

‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி தொடர்கிறேன்’ என்ற வேதவசனத்தின் படி வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும்.

‘தீய பழக்கத்திலிருந்து விடுதலைபெற என்னால் முடியும்’ எனும் நம்பிக்கை முதலாவது தேவை. ‘என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு’ என்ற வசனத்தின் படி கடவுளின் உதவியுடன் நாம் தன்னடக்கம் உடையவராக மாற முடியும்.

வாழ்க்கையில் பல சாதனைகளை புரிந்தவர்கள் ஆனாலும் சில பாவங்களை விட்டுவிடுதல் அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. அதுவே அவர்களுக்கு தோல்வியை தேடித்தரும்.

ஆதலால் எச்சரிக்கையாய் இருங்கள். தவறுகளை தூண்டும் இடத்தில் இருக்காதீர்கள். சில இடங்களுக்கு செல்லும் போது சில தீய காரியங்கள் செய்ய தோன்றும், அப்படிப்பட்ட இடத்தை தவிர்த்தல் நல்லது.

எபேசியர் 4:27-ன்படி ‘பிசாசுக்கு இடம்கொடாமல் இருங்கள்’.

நீங்கள் எந்த பழக்கத்தை விட்டு விட நினைக்கிறீர்களோ அது புகைபிடித்தல், குடிப்பழக்கம், புறம்பேசுதல், தீய எண்ணம், சிற்றின்ப மோகம், கோபம், பொறாமை என்று எதுவாக இருந்தாலும் கடவுளை நாடுங்கள். அவர் உங்களுக்கு விடுதலை தர வல்லவராயிருக்கிறார்.

அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட, உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடுவது சிறந்தது. வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது. நல்ல பழக்க வழக்கங்களுடனும், இறைவனின் அருளுடனும் அதை எதிர்கொள்வோம்.

துலீப் தாமஸ், சென்னை.
Tags:    

Similar News