ஆன்மிகம்

தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்

Published On 2017-12-18 08:14 IST   |   Update On 2017-12-18 08:14:00 IST
தேவையை உணராமல் எவ்வளவுதான் நமக்கென்று ஆஸ்தி அந்தஸ்தை பெருக்கி கொண்டாலும் அதனால் கவலைகள் கரைவதில்லை.
தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் (மத்தேயு 6:33)

மனவியல் மருத்துவர் ஒருவரிடம் ஒரு நாள் இருவர் சிகிச்சைக்காக வந்தனர். ஒருவர் சொத்துக்கள் எதையும் சம்பாதிக்க முடியாமல் போன ஒரு ஏழை. இன்னொருவர் அளவுக்கதிமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள பெரும் பணக்காரர். இரண்டு பேருடைய நிலைமையும் முற்றிலும் எதிர் எதிரானது. ஆனால் இருவரின் வியாதியும் ஒரே விதமானது. இருவருக்கும் கடுமையான மனஉளைச்சல். ஏழை மனிதனுக்கு தன் பிள்ளைகளுக்காக எதையும் சம்பாதிக்க முடியாமல் போனதே என்ற கவலையால் மன உளைச்சல் வந்தது. பெரும் பணக்கார மனிதனுக்கு தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொடுக்க முடியாத சிக்கலால் மன உளைச்சல் வந்தது.

பணமின்மையும் கவலைகளை கொண்டு வரும். பணமிகுதியும் கவலைகளை கொண்டு வரும். எனவே கவலைகள் வராமல் தடுக்க பணமோ, பொருளோ உதவாது என்பதே உண்மை. தைராய்டு வியாதி சிலரை நோஞ்சான்களாக மாற்றிவிடும். சிலரை மிகவும் பருமனாக்கி விடும்.

பணத்தை தேடுவதினால் அல்ல. செல்வங்களை சேர்ப்பதினால் அல்ல. இருதயத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுவதினாலேயே கவலைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. மனதை வறுமை நிலைமை ஆண்டாலும் கவலைகள் பெருகும். செல்வ நிலைமைகள் ஆண்டாலும் கவலைகள் வரும். கடவுள் இருதயத்தில் ஆளுகை செய்தால் எந்த நிலைமையிலும் கவலைகளுக்கு தீர்வு ஏற்படும்.

கடவுளால் இருதயம் ஆளுகை செய்யப்படும்போது அங்கே தேவ அமைதி வரும். தேவ அமைதி இருதயத்தில் தங்கும்போது கவலைகள் உள்ளே வரவும் இயலாது. வெளியே போகாமல் கவலைகள் தங்கிவிடவும் முடியாது. சாலமன் ராஜாவிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தன. இருப்பினும் அவர் கவலைகளுக்குத் தீர்வு கண்ட மனிதன் அல்ல. 

அப்போஸ்தலனாகிய பவுல் இல்லாமைகளின் நடுவில் வாழ நேர்ந்தவன். ஆனாலும் கவலைகள் அவனை ஆளமுடியவில்லை. அவன் தேவ சமாதானத்தினால் மனரம்மியமாக வாழ இயன்றவனாயிருந்தான். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் தனக்குள் தேவ ஆளுகையை தேடி தன் மனதை இலகுவாக வைக்க அவன் அறிந்திருந்தான்.

நமது இருதயம் கடவுளால் ஆளப்பட வேண்டிய ஒரு இயற்கையான அவசியத்தில் உள்ளது. நமது இருதயம் தேவ ஐக்கியத்தினாலும் ஆலோசனையினாலும் வழிநடத்தப்பட வேண்டிய தேவையில் உள்ளது. அந்த தேவையை உணராமல் எவ்வளவுதான் நமக்கென்று ஆஸ்தி அந்தஸ்தை பெருக்கி கொண்டாலும் அதனால் கவலைகள் கரைவதில்லை.

“ செல்வம் கொஞ்சமாயிருந்தால் நீ எஜமானாயிருப்பாய்

அதிகமாகி விட்டாலே அதற்கு அடிமையாகி விடுவாய்“

-சாம்சன் பால் 

Similar News