ஆன்மிகம்
அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று நடக்கிறது
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகாரமாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவில் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் பழைய கோவிலில் திருப்பலி, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். இரவு 9 மணிக்கு திருச்சப்பரபவனி நடைபெற்றது.
9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேலராமன்புதூர் பங்குத்தந்தை அருட்பணியாளர் ஆனந்த் தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும், திருப்பலி நடக்கிறது. இதற்கு தூத்துக்குடி மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் கிருபாகரன் தலைமை தாங்குகிறார். திண்டிவனம் தமிழக விவிலிய பணிக்குழு அருட்பணியாளர் உபால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாளான நாளை(ஞாயிற்றுகிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர்ரெம்ஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது. இதற்கு கன்னியாகுமரி காசா கிளாரட் அருட்பணியாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் டன்ஸ்டன் மறையுரை ஆற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது. 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.