ஆன்மிகம்

இறைவனின் மன்னிப்பை பெறுவோம்

Published On 2017-07-06 09:46 IST   |   Update On 2017-07-06 09:46:00 IST
இறைவனின் மன்னிப்பை பெற்று நம் சிந்தனை, சொல், செயல்களால் நலம் பயக்கும் நல்லவர்களாக வளமான வாழ்வு வாழ்வோம்.
வாழ்வு என்பது ஒரு புதையல். அதில் ஏராளமான ரகசியங்கள் நம் கண் முன்னே நமக்குள்ளே புதைத்து வைக்கப்படுகின்றன. அந்த புதையலில் மறைந்திருக்கும் ஆற்றலின் மதிப்பு தெரியாமலே நாம் வாழ்ந்து மடிந்து விடுகின்றோம். வாழ்வில் மகிழ்ச்சியை எங்கோ தேடுகின்றோம். ஆனால் அக வாழ்வில் மகிழ்ச்சியை தேட மறந்து விட்டோம்.

இந்த அகத்தேடல் தான் ஆன்மிக தேடல் ஆகும். வாழ்வில் வளமாக வாழ்வதற்கு அவசியமான ஞானமும், தேர்ந்து தெளிகின்ற தன்மையும் தேவை. இந்த இரண்டும் வாழ்வை சரியான கண்ணோட்டத்துடன் அணுக நமக்கு உதவுகிறது. இதை பெறுவதற்கான காலம் தான் தவக்காலம்.

நாம் பலவீனமானவர்கள். பாவம் செய்கின்றோம். பயிர் விளையும் நிலத்தில் களைகள் இருந்தால் பயிரின் வளர்ச்சி தடைபடும். அதுபோல நம் வாழ்வில் பாவக்கறை இருந்தால் நல்வாழ்வின் வளர்ச்சி தடைபடும். களைகளை எடுப்பதும், பாவக்கறைகளை நீக்குவதும் நம்மை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். இறைவன் நம்மிடம் மனமாற்றத்தையே விரும்புகிறார். அதை அவர் மகிழ்ந்து கொண்டாடுகின்றார்.



குற்றம் புரிந்தவன் தண்டனை பெறுவது சட்டத்தின் நீதியாக கருதப்படுகின்றது. ஆனால் இறைவனின் பேரன்போ இரக்கப்பெருக்காகி ஆழிப்பேரலையாக மனதில் பாய்ந்து மன்னிக்கிறது. பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு. மாறாக கடவுள் கொடுக்கும் அருட்கொடை நம் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு (உரோமையர் 6:23)

எனவே, உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள் (தி.ப 3:19) ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கின்றோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துவார். (1 யோ 1:8-9)

நாமும் உண்மை நிலை உணர்ந்து இறைவனிடம் சரணடைந்து மனமாற்றம் அடைவோம். இறைவனின் மன்னிப்பை பெற்று நம் சிந்தனை, சொல், செயல்களால் நலம் பயக்கும் நல்லவர்களாக வளமான வாழ்வு வாழ்வோம்.

அருட்திரு. லூர்து ஜெயராஜ், சலேசியன் சபை, உதவிப்பங்குத்தந்தை, சவேரியார் பாளையம்.

Similar News