ஆன்மிகம்

கடவுள் நம்பிக்கை அவசியம் தேவை

Published On 2017-07-01 11:07 IST   |   Update On 2017-07-01 11:07:00 IST
மனிதனுக்கு நம்பிக்கை, அதிலும் கடவுள் மீது நம்பிக்கை மிக அவசியம் என்பதை உணர்ந்து நாமும் நம்பிக்கையோடு வாழ்வோம். ஒளி பெற்று புது வாழ்வு பெறுவோம்.
யோவான் 9:5-ல், “நானே உலகின் ஒளி“ என்று கூறி, நம்பிக்கையை வழங்கும் ஒளியாக இயேசுவே நிற்கின்றார். ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற நம்பிக்கை மிக அவசியம். ஆகவேதான் யோவான் 11;25-ல் “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்“ என்றும், நம்பிக்கை முதன்மையானது என்கிறார் இயேசு கிறிஸ்து.

இந்த நற்செய்தியில் பிறவிக்குருடன் வழியாக முதலில் சீடர்கள் பார்வை பெறுகிறார்கள். சீடர்கள் மனதில் பார்வையற்று இருப்பது பாவத்தினால் தான். ஆனால் இயேசு, அது பாவத்தினால் அல்ல, கடவுளின் செயல் திட்டத்தை வெளிப்படுத்தவே என்கிறார்.

யோவான் 9:6-ல் பிறவிக்குருடனின் கண்களில் உமிழ்நீரால் சேறு உண்டாக்கி அதை பூசுகிறார். அதை அவன் ஏற்றுக்கொள்கின்றான். இதுதான் நம்பிக்கையின் தொடக்கம். யோவான் 9:7-ல் சீலோவாம் குளத்தில் கண்ணை கழுவு என்கிறார் இயேசு. அவனும் கழுவுகிறான். பார்வை பெறுகிறான்.



இதையே யோவான் 9:11-ல் “நான் போனேன், கழுவினேன், பார்வை பெற்றேன்“ என்று கூறி பரிசேயர்களிடம் தெளிவு படுத்துகிறான். பார்வை பெற்றவர் தம் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். பரிசேயர்கள் பார்வை பெற்றிருந்தும், அனைத்தையும் பார்த்த பிறகும், இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் இறுதிவரை இருளின் மக்களாகவே வாழ்வதைக்கண்ட இயேசு வருத்தப்படுகிறார்.

அதனாலேயே யோவான் 11:25-ல் “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வை பெறவும், பார்வையுடையோர் பார்வை அற்றவராகவும் வந்தேன்“ என்றும் நம்பிக்கை உள்ளவர்கள் பார்வை இழந்திருந்தாலும் கிறிஸ்துவை அறிவதில் படிப்படியாக முன்னேறி, இறுதியில் அவரிடம் சரணடைகிறார்கள். கிறிஸ்துவால் ஒளி பெற்று கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர்கின்றார்கள்.

மத் 5:4-11-ல் சீடர்கள் இயேசுவின் அறிவுரைப்படி படகை ஆழத்திற்கு கொண்டு சென்றார்கள். அதிகமான மீன்களை பெற்றார்கள். நம்பிக்கையினால் தான் சீடர்கள் இயேசுவின் போதனைகளை பின்பற்றி அதனை மனிதர்களுக்கு எடுத்துரைப்பவர்களாக மாறினார்கள். ஆகவே மனிதனுக்கு நம்பிக்கை, அதிலும் கடவுள் மீது நம்பிக்கை மிக அவசியம் என்பதை உணர்ந்து இந்த தவக்காலத்தில் நாமும் நம்பிக்கையோடு வாழ்வோம். ஒளி பெற்று புது வாழ்வு பெறுவோம்.

அருட்திரு. வி.மரியஅற்புதம், அதிபர், மலைமாதா திருத்தலம், திண்டுக்கல்.

Similar News