ஆன்மிகம்

கல்லறை கூட, இயேசுவை அடக்க முடியவில்லை

Published On 2017-06-05 14:10 IST   |   Update On 2017-06-05 14:10:00 IST
அலட்சியமான வாழ்வு என்பது கல்லறைக்குள் அடங்கி அழிந்து போன வாழ்வு ஆகிறது. பிறரை வாழ வைப்பவருக்கு கல்லறையில் இடமில்லை. அவர், பிறரின் வாழ்வில் வாழ்கிறார்.
அவருக்கு பிறக்க இடம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர், அனைவரின் மனதிலும் பிறக்க வேண்டும் என்பதற்காக. அவரை, அடக்கம் செய்ய ஒரு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவர், அனைவரின் வாழ்விலும் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக. அவரின் பிறப்பும், இறப்பும் பொதுவாக இருந்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

அனைவரும் அவரிலே பிறக்க வேண்டும், அதேபோல் அனைவரும் அவரிலே இறந்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காகத்தான். நம் வாழ்வின் சிறப்பு, பிறரின் வாழ்வில் தான் அடங்கி உள்ளது. பிறர் வாழ வேண்டும் என்பதற்காக தன் ரத்தத்தையும், சதையையும் கொடுத்தவர் இயேசு.

“நானே வாழ்வு“ என்ற இயேசுவை புதைத்து அடக்க முடியுமோ? அவர், வாழ்வின் சக்தி. அந்த சக்திக்கு அழிவில்லை. சாக்ரடீஸ் விஷத்தில் சாக வேண்டும். அதை அவர், ஆனந்தமாக அதை ஏற்றுக்கொண்டார். அப்போது அவரின் சீடர்கள் அழ ஆரம்பித்தனர். அதற்கு சாக்ரடீஸ், சீடர்களே அழாதீர்கள்.



இது மரணத்தை படிக்க அரிய வாய்ப்பு என்று சொல்லி கொண்டே, “என் கால்கள் மரத்து போகிறது, ஆனால் நான் சாகவில்லை. என் கைகள் செத்து போகின்றன, ஆனால், நான் சாகவில்லை. மரணம் என்பது என் புறத்தில் தான் நடக்கிறது. என் (நான்) ஆன்மா அழியாமல் அப்படியே இருக்கிறது என்றாராம். சோடை போன விதை மட்கித்தான் போகும். வீரியமுள்ள விதை மட்டுமே முளைத்து எழும்.

இயேசு வீரியமான விதை. வாழ்வின் சக்தியாக வலம் வந்தவர். அவர், எப்படி சாக முடியும்? பிறரின் கண்ணீரையும், சுமைகளையும் சுமக்க மறந்தவன், மறுத்தவன் மரணம் வரும் முன்னே மரித்து போவான். பிறர் வாழ, வாழ்வின் சக்தியாக வலம் வந்த இயேசுவின் உடலை கிழித்தனர், ஆனால் அவரின் உள்ளத்தை கிழிக்க முடியவில்லை. அவரின் இதயத்தை சிதைத்தார்கள், ஆனால் அவரின் லட்சியத்தை சிதைக்க முடியவில்லை.

எனவே, லட்சியமுள்ள வாழ்வு அழிவதில்லை, இன்னொன்றாக தோன்றுவதற்காக அது மறைகிறது. ஆனால் அலட்சியமான வாழ்வு என்பது கல்லறைக்குள் அடங்கி அழிந்து போன வாழ்வு ஆகிறது. பிறரை வாழ வைப்பவருக்கு கல்லறையில் இடமில்லை. அவர், பிறரின் வாழ்வில் வாழ்கிறார்.

அருட்திரு. ஜான் நெப்போலியன், செயலர்,

புனித அந்தோணியார் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.

Similar News