ஆன்மிகம்

இறைவனின் மாட்சிமையில் பங்கேற்போம்

Published On 2017-06-01 12:01 IST   |   Update On 2017-06-01 12:01:00 IST
‘தர்மம்‘ செய்யும் போது, பிறருடன் பகிர்வதன் வழியாக இறைவனுக்கே செய்கிறோம். ‘ஜெபம்‘ செய்யும் போது இறைவனோடு உள்ள உறவை ஆழப்படுத்துகின்றோம்.
நாம் கடந்து வந்த வாழ்க்கை பாதையில் விழுந்த, எழுந்த, தவறிய, தடுமாறிய தருணங்களை எல்லாம் ஆழமாக எடைபோட்டு பார்த்து, திருந்துவதற்கும், நம்மை திருத்தி கொள்வதற்கும் ஏற்ற காலத் தான் தவக்காலம்.

சாலையில் நாம் பயணிக்கும் போது “நில்-கவனி-செல்“ என்ற அடையாள விளக்குகளை பார்த்திருப்போம். நம் வாழ்வில் நின்று கவனித்து, திருத்த வேண்டியவைகளை திருத்தி, புதிய வாழ்வை நோக்கி செல்ல இந்த தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. “மாற்றங்கள் இன்றி ஏற்றமில்லை. மாற்றம் மனதிலும் வேண்டும், மண்ணிலும் வேண்டும், தனி மனிதனிலும், இத்தரணி மக்களிலும் வேண்டும்“. இதற்கான அழைப்பு தான் தவக்காலம்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு நம்பிக்கையின் அச்சாரமாகவும், ஆணிவேராகவும் விளங்குவது கிறிஸ்துவின் பாடுகளும், உயிர்ப்பும் தான். “இயேசுவின் பாடுகளைப்பற்றி சிந்தித்து, உருகி கண்ணீர் விட்டு அழுவதற்கோ, பரிதாபப்படுவதற்கோ உரிய காலமல்ல. மாறாக, கிறிஸ்துவின் பாடுகள், மரணம் நம் வாழ்வை மறு ஆய்வு செய்யவும், நம் எண்ணங்கள், சொற்கள், செயல்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரவும் தகுந்த காலம் இதுவே“ என பவுல் அடியார் கூறுகிறார்.



முழு மனமாற்றத்திற்கான மூன்று வழிமுறைகளை இக்காலம் நமக்கு எடுத்துரைக்கின்றது. அவை ஜெபம், நோன்பு, தவம் ஆகும். இவை மூன்றும் ஒன்றையன்று நிறைவு செய்கின்றன. ‘நோன்பு‘ இருக்கும் போது உணவு, உடை, அடிப்படை தேவைகளில் ஒறுத்தல் செய்கிறோம். இதனால் நாம் இறைப்பற்றுதலையும், தியாக உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். ‘தர்மம்‘ செய்யும் போது, பிறருடன் பகிர்வதன் வழியாக இறைவனுக்கே செய்கிறோம். ‘ஜெபம்‘ செய்யும் போது இறைவனோடு உள்ள உறவை ஆழப்படுத்துகின்றோம்.

இவ்வாறு செய்வதன் வழியாக இறைவனின் மாட்சியில் பங்கேற்பாளர்களாகின்றோம். நமது தவக்கால முயற்சிகளும், தூய வாழ்வும், நம் ஆன்ம ஈடேற்றத்திற்கும், பிறர் நலத்திற்கும் பயன்பட, இன்றே நம் வாழ்வை மேம்படுத்துவோம்.

அருட்திரு. ஜான்பேப்டிஸ்ட், சலேசியன் சபை,

Similar News