ஆன்மிகம்

அன்பின் தூய ஆவியை இதயத்தில் அமர்த்துவோம்

Published On 2017-05-16 08:04 GMT   |   Update On 2017-05-16 08:04 GMT
தூய ஆவி நமக்குள் நிரம்ப வேண்டுமெனில் நமக்குள்ளிருக்கும் கெட்ட ஆவி விலக வேண்டும். பகைமை, கோபம், வெறுப்பு, சுயநலம் போன்ற பேய்களை விலக்குவோம்.
இயேசு தம்முடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு கெரசேனர் பகுதிக்குப் படகில் சென்றார். அந்தப் பயணத்தின் வழியில் தான் கொந்தளித்த கடலை ஒரு வார்த்தை சொல்லி அமைதியாக்கியிருந்தார் இயேசு. சீடர்கள் அந்தத் திகைப்பிலிருந்து இன்னும் விடுபட்டிருக்கவில்லை.

படகிலிருந்து இயேசுவும் சீடர்களும் இறங்கிய உடனேயே பேய் பிடித்த ஒருவன் கல்லறைகளுக்கு இடையேயிருந்து அவரை நோக்கி ஓடி வந்தான். கல்லறைகளே அவனுடைய இருப்பிடம். அவனை ஊர் மக்கள் அடிக்கடி சங்கிலிகளால் பிணைத்து மரங்களில் கட்டி வைப்பார்கள். ஆனால் அவன் அவற்றையெல்லாம் மிகவும் எளிதாக உடைத்தெறிந்துவிடுவான்.

சங்கிலிகள் எத்தனை கனமானதாக இருந்தாலும் அவனை அடக்க முடிவதில்லை. கூரான கற்களைக் கொண்டு தன்னுடைய உடலையே அவன் கீறிக் காயப் படுத்துவான். அதனால் அவனுடைய உடம்பு முழுவதும் காயங்களின் வடுக்களும், மாறாத புண்களும், வழியும் ரத்தமும் நிரந்தரமாகி விட்டன.

எத்தனையோ குருக்கள், மந்திரவாதிகள், மருத்துவர்கள் முயன்றும் அவனுடைய வியாதியைத் தீர்க்க முடிய வில்லை. யாராலும் அவனுக்குள் இருக்கும் ஆவியைத் துரத்த முடியவில்லை.

தன்னை நோக்கி ஓடிவரும் மனிதனை இயேசு கண்டார். அவனை உற்று நோக்கினார். மூச்சிரைக்க, உதடுகளின் ஓரம் உமிழ்நீர் வழிய இயேசுவுக்கு முன்னால் வந்து நின்றவன் கத்தினான்.

‘இயேசுவே... உமக்கு இங்கே என்ன வேலை. திரும்பிப் போய்விடும். என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ இயேசு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இயேசுவே உமக்கும் எமக்கும் இடையே ஏன் தகராறு? என்னுடைய வழியில் நான் போய்க்கொண்டிருக்கிறேன். என்னைத் தடுக்க வேண்டாம்’ என்று மீண்டும் கத்தினான்

‘உன் பெயர் என்ன?’ இயேசு கேட்டார்.

‘இலேகியோன்’ பேய் பிடித்திருந்தவன் பதில் சொன்னான்.

இலேகியோன் என்பது ரோம அரசனின் கீழ் சுமார் அறுபதினாயிரம் வீரர்களை உள்ளடக்கிய மாபெரும் படை.

‘இலேகியோனா?’ இயேசு அவனை உற்றுப் பார்த்துக் கேட்டார்.

‘ஆம்... நாங்கள் பலர்’ அவன் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னான்.



‘நான் ஏற்கனவே உன்னை எச்சரித்திருக்கிறேனே. இன்னும் ஏன் மக்களைத் தொந்தரவு செய்கிறாய்?’ இயேசு குரலைக் கடுமையாக்கினார்.

‘இயேசுவே... நீர் கடவுளின் மகன் என்பதை நான் அறிவேன். என்னைத் துரத்த வேண்டாம்’ அவன் உறுமினான்.

‘உன்னை விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை’ இயேசு சொன்னார்.

‘அப்படியானால் அதோ அந்த பன்றிகளின் கூட்டத்தில் எம்மை அனுப்பிவிடும். எம்மை அழிக்க வேண்டாம்’ தீய ஆவி இரைச்சலாய்ப் பேசியது.

இயேசு திரும்பிப் பார்த்தார். அங்கே ஏரிக்கரை ஓரமாக சிலர் ஏராளமான பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு பேய் பிடித்தவனைப் பார்த்தார்.

‘போ....’ ஆணையிட்டார்.

பேய்கள் அவனை விட்டு அகலத் துவங்கின. அவன் அலறத் துவங்கினான். அவனை விட்டு வெளியேறிய பேய்கள் எல்லாம் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தன. பன்றிகள் எல்லாம் ஆவிகளின் திடீர்த் தாக்குதலால் சரிவில் உருண்டு ஏரியில் விழுந்து மாண்டு போயின. பன்றி மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் பின் வாங்கினார்கள்.

இயேசுவின் சீடர்கள் வியந்தார்கள். மக்கள் பயந்தார்கள்.

பேய் பிடித்திருந்தவன் துவண்டுபோய்க் கிடந்தான். இயேசு அவனைத் தூக்கி நிறுத்தினார். இதற்குள் மக்கள் நாலா திசைகளிலும் ஓடிப் போய் தாங்கள் கண்ட செய்தியைப் பரப்பினார்கள்.

தாங்கள் கேள்விப்படுவது உண்மையா என்று அறிய மக்கள் ஓடி வந்தார்கள். அங்கே பேய் பிடித்திருந்தவன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார்கள். நடந்த அனைத்தையும் கண்டு ஆச்சரியப்படுவதற்கு மாறாக, அச்சமடைந்தனர்.

மக்களுக்கு மனிதனை விட்டு விட்டுப் பேய் ஓடியது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டாயிரம் பன்றிகளின் இழப்பு மாபெரும் இழப்பாய் தெரிந்தது. எனவே அவர்கள் இயேசுவைக் கழற்றி விட நினைத்தனர்.

‘இயேசுவே... நீர் உண்மையிலேயே பெரியவர். ஆனாலும் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. தயவு செய்து எங்களை விட்டுப் போய்விடும்’ அவர்கள் இயேசுவிடம் வேண்டினார்கள்.

நலம்பெற்ற அந்த மனிதன் இயேசுவிடம், ‘ஐயா.. என்னையும் இனிமேல் உம்முடன் சேர்த்துக் கொள்ளும்’ என்று வேண்டினான்.

இயேசு அவரிடம், ‘இல்லை. நீர் போய் கடவுள் உனக்குச் சொன்னதையெல்லாம் மக்களுக்கு அறிவி. அது போதும்’ என்றார்.

தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதன், இயேசுவின் அற்புதத்தை ஊரெங்கும் அறிவிக்கத் துவங்கினான்.

தூய ஆவி நமக்குள் நிரம்ப வேண்டுமெனில் நமக்குள்ளிருக்கும் கெட்ட ஆவி விலக வேண்டும். பகைமை, கோபம், வெறுப்பு, சுயநலம் போன்ற பேய்களை விலக்குவோம். அன்பின் தூய ஆவியை இதயத்தில் அமர்த்துவோம்.
Tags:    

Similar News