ஆன்மிகம்

நற்செய்தி சிந்தனை : திராட்சைக் கொடி

Published On 2017-05-10 05:32 GMT   |   Update On 2017-05-10 05:32 GMT
திராட்சைக் கொடியின் தன்மையையும், அதைப் பயனாக்கும் முறையையும், ஆழமாக இயேசு பிரான், இவ்வுலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். சிந்திப்போம். செயல்படுவோம்.
இயேசு தொடர்ந்து இந்த உலகில், மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவ்விதம் உபதேசித்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் தன் சீடர்களை நோக்கி, இவ்வாறு கூறினார்:

“உண்மையான ‘திராட்சைக் கொடி’ நானே! என் தந்தையே அக்கொடியை நட்டு வளர்ப்பவர். என்னிடம் உள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும், அவர் தறித்து விடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுதியாக கனி தருமாறு ஆக்கி விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால், நீங்கள் ஏற்கனவே தூய்மையாக இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல, நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்திருந்தாலன்றித், தானாகக் கனி தர இயலாது. அதுபோல, நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது”.

“நானே, திராட்சைக் கொடி. நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து, உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்திராதவர், கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு, உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு, நெருப்பில் இட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து, என் சீடர்களாய் இருப்பதே, என் தந்தைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

இந்த உண்மையைக் கூர்ந்து கவனிப்போம். ‘தான் யார்?’ என்பதை, ஒவ்வோர் இடத்திலும், உவமைகள் வாயிலாக, இயேசு பெருமான் வெளிப்படுத்துகிறார்.

இவ்விடத்தில், தான் ஒரு தோட்டக்காரராக இருந்து பேசுகிறார். நானே உண்மையான திராட்சைக் கொடி என்கிறார். இந்தக் கொடியை நட்டவர் என் தந்தை என்கிறார். திராட்சைக் கொடியில் உள்ள அனைத்துக் கிளைகளும், கனி தரும் என்று கூற முடியாது. கனி கொடாத கிளைகளை, தந்தையானவர் தறித்து விடுவார் என் கிறார். இதோடு அவர் வேலை முடிந்தது என்று, அவர் நின்று விடுவதில்லை. கனி தரும் அனைத்துக் கிளை களையும், மிகுதியாகக் கனி தருமாறு ஆக்கி விடுவார்.

மேலும் அவர் கூறும் பொழுது, ‘என்னோடு நீங்கள் இணைந்து இருங்கள்’ என்கிறார். எப்படி? ‘நான் உங்களோடு இணைந்து இருப்பது போல’, என்று கூறு கிறார்.

சீடர்களோடு அவர் இணைந்து இருப்பதை முதலில் உறுதிப்படுத்துகிறார். அதைப்போல, உண்மையாக என்னுடன் இணைந்து இருங்கள் என்கிறார்.

கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்திருந்தால்தான், கனியைக் கொடுக்க முடியும். அதைப்போல, என்னோடு இணைந்திருந்தால், கனி தர முடியும். அதனால்தான் நானே ‘திராட்சைக் கொடி’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்துகிறார்.



என்னை விட்டுப் பிரிந்தால் எதுவும் செய்ய முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

சீடர்களுக்கு உபதேசம் செய்கின்றபொழுது, தன் தந்தையின் சிறப்பு என்ன? தந்தையானவர் என்னை எப்படி வழி நடத்துகிறார்? என்றெல்லாம் எடுத்துரைத்துப் பேசுகிறார்.

கனி தராத கிளைகளைத் தறிப்பதும், கனி தரும் கிளைகளை மிகுதியாகக் கனி தர வைப்பதும்தான், தன் தந்தையின் பணி என்கிறார். தந்தையின் பேச்சையும், செயலையும், தட்டாமல் நான் ஏற்றுக்கொள்வதைப் போல, நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.

அதனால்தான், ‘நான் உங்களோடு இணைந்திருப் பதுபோல, என்னோடு இணைந்திருங்கள்’ என்கிறார். அப்படியிருந்தால், ‘என் தந்தையைப்போல, நானும் உங்களை வழி நடத்துவேன்’ என்ற பொருள், ஆழமாகப் புலப்படுகிறதல்லவா?

ஆம்! நண்பர்களே! இந்த நற்செய்தி போதிக்கும் கருத்தை, ஆழமாகச் சிந்திப்போம். அந்தக் கருத்துக்கு, வடிவம் கொடுப்போம். அவர் போதனையை ஏற்றுக்கொள்வோம்.

இந்த வாரம் இச்சிந்தனையின் உட்பொருளை ஆராய்வோம்.

எம் மதமாக இருந்தாலும் மதம் சார்ந்து பார்க்காமல், மனம் சார்ந்து பார்ப்போம். பல்கிக்கிடக்கும் நற்கருத்துகளை ஏற்றுக்கொள்வோம். ஏதோ திராட்சைக் கொடிதானே என்று பாராமல், திராட்சைக் கொடி பற்றிய செய்திகள், நற்செய்தியில் எப்படிச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைச் செவிமடுப்போம்.

நான், உங்களுக்குள்ளும், நீங்கள் எனக்குள்ளும் இருக்கும் சிறப்பில் காணும் தத்துவத்தை எண்ணிப் பாருங்கள்.

இயேசு பெருமான், மக்களிடம் பேசுகின்றபொழுது, தன் விருப்பத்திற்குப் பேசவில்லை. தன் தந்தையின் வழி நின்று பேசுகிறார். தந்தையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, தந்தையின் செயல் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார்.

கிளைகள், திராட்சைக் கொடியோடு இணைந்து நல்ல கனிகளைத் தருவதைப் போல, என்னோடு இணைந் திருங்கள்; நற்கனியை நீங்கள் கொடுக்க முடியும் என்கிறார்.

இணைந்திருப்பதைப் பற்றிப் பேசுகின்றபொழுது இருபுறமும் இச்செயல் இருக்க வேண்டும் என்பதை வலி யுறுத்துகிறார். அதனால்தான் நான் உங்களோடு இணைந்திருப்பது போல, நீங்களும் என்னோடு இணைந்திருங்கள் என்று கூறுகிறார்.

தந்தையின் செயல்படி நான் இயங்குகிறேன். அதைப்போல, என் செயல்படி நீங்கள் இயங்குங்கள் என்று கூறுகிறார். இயேசுவின் உவமைகளைப் படிக்கும் பொழுது, நாம் கற்க வேண்டியவைகள் பல்கிக் கிடக்கின்றன. உவமைகள் மக்கள் மனதில் நின்று நிலைத்து விடும். சிந்திக்கத் தூண்டும். எளிய, இனிய உவமைகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். மக்களும் புரிந்து கொண்டு செயல்பட வழி வகுக்கும்.

திராட்சைக் கொடியின் தன்மையையும், அதைப் பயனாக்கும் முறையையும், ஆழமாக இயேசு பிரான், இவ்வுலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். சிந்திப்போம். செயல்படுவோம்.

செம்பை சேவியர்.
Tags:    

Similar News