ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: கடவுளின் கருணையை உணர்வோம்

Published On 2017-03-28 04:34 GMT   |   Update On 2017-03-28 04:35 GMT
தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
“கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.

ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)

கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)



நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.

இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

அருட்திரு. வே.பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, ஆத்தூர்.

Similar News