ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: இயேசுவை போல் பிறருக்காக வாழ்வோம்

Published On 2017-03-20 09:15 IST   |   Update On 2017-03-20 09:15:00 IST
நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். நாம் வாழும் காலம் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தவக்காலத்தின் தொடக்கமே, “மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கு திரும்புவாய், மறவாதே” என்ற அறிவுறுத்தலை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் முன் வைக்கிறது. நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். நாம் வாழும் காலம் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற பயனுள்ள வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. அவர், தூய ஆவியால் நிறைந்தவராய் சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே இருந்தார் என்று இயேசுவின் வாழ்வுக்கு திருவிவிலிய வரிகள் சான்று பகர்கின்றன. 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு, தன் இறுதி மூன்றாண்டுகள் சமூகப்பணி வாழ்க்கைக்கு முன் 40 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.

சாத்தானை வென்று சரித்திரம் படைத்தார். சகல துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கி சிலுவை சாவிற்கு தன்னையே அர்ப்பணித்தார். எந்த மனிதரும் ஏற்காத அவரது சிலுவை மரணமும், உயிர்ப்பும் இன்று வரை இயேசுவை உயிருள்ள தெய்வமாக உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.



மரணித்து விட்டால் திரும்ப கிடைக்குமா இந்த உடல்? எனவே தூய ஆவியின் ஆலயமாக விளங்கும், நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் வேண்டாத பாவச்செயல்களை விட்டொழிப்போம். இறந்து விட்டால் திரும்பக்கிடைக்குமா இதே வாழ்வும், உறவும்? ஆகவே அறுபட்ட உறவுகளை ஒன்றிணைப்போம், உடைந்த உறவுகளை சீராக்குவோம். மடிந்த பின் இந்நாட்டிற்கும், நகருக்கும் திரும்பி வருவோமா? எனவே சாதி, மத, இன, மொழி பேதமை தவிர்த்து பரந்த மனதுடன் பலரையும் நேசிப்போம்.

‘இன்றே இறக்கப்போகிறேன் என்ற மனநிலையோடு வாழ்’ இது புனித பெரிய அந்தோணியாரின் கூற்று. இதை மனதில் வைத்து இன்றே வாழ பழகுவோம். நன்றே செய்வோம், அதையும் இன்றே செய்வோம். இறையருள் நம்மை வாழி நடத்தி பாதுகாக்கட்டும்.

அருட்திரு. சுரேஷ், மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர், என்.ஜி.ஓ.காலனி பங்கு, திண்டுக்கல்.

Similar News