ஆன்மிகம்

தவக்கால சிந்தனைகள்: மன்னிக்கும் அன்பே, பேரன்பு

Published On 2017-03-18 13:54 IST   |   Update On 2017-03-18 13:54:00 IST
இறைவனின் அளவற்ற மன்னிப்பை பெற்று மகிழும் பேறுபெற்றுள்ள நாம், பிறரையும் மன்னித்து ஏற்க வேண்டும் என்பது அவரது விருப்பம். இத்தகைய அன்பே மன்னிக்கும் பேரன்பு ஆகும்.
“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பிரிவு காட்டுபவர் இறைவன்” என்கிறது திருவாசகம். அதுபோல் இறைவனின் எல்லையற்ற பேரன்பை திருவிவிலியம் முழுவதும் உணர்ந்தாலும் இயேசு கூறும் ‘காணாமல் போன மகன்’ என்னும் உவமை (லூக் 15:11-32) அன்பின் விளக்கத்தை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

செல்வ சுகபோகங்களில் மூழ்கி பாவ வாழ்வில் திளைத்து மனம் போன போக்கில் வாழ்ந்த இளையமகன், செல்வ செழிப்பின் நிலையற்ற தன்மையை உணர்ந்தான். பாவ வாழ்வுக்கு கிடைத்த தண்டனையாக மனித மாண்பை இழந்த நிலையில் தன்னிலை உணர்ந்து மனம் வருந்தினான். மீண்டும் தந்தையின் அன்பை நாடினான்.

எட்டி உதைக்கும் பிள்ளையை கட்டி அணைக்கும் தாய் போல மகனின் வருகைக்காக காத்திருந்த தந்தையும் பேரன்போடு பரிவுகாட்டி அரவணைக்கிறார். இந்த தந்தையின் அன்பு, தாயின் அன்பை மிஞ்சிய பேரன்பாகும். “இடறி விழுவது பலவீனம். அதில் விழுந்தே கிடப்பது மதியீனம்“. மாறுவது மனித இயல்பாக காட்டப்பட்டாலும் அதிலிருந்து மீள்வதே மகத்தான வாழ்வுக்கு மகுடம் சூட்டும்.



சரண் அடைந்தவருக்கு இறைவன் அரணாவார். தன்னிலை அறிந்து, தவறுகள் களைந்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். “உங்கள் கவனத்தை உங்கள் அகம் நோக்கி குவியுங்கள்” என்கிறார் பரமஹம்ச யோகானந்தர்.

தம்பியை ஏற்றுக்கொள்ள மனமில்லாத மூத்த மகன் போன்று, பிறரது குறைகளை மிகைப்படுத்தி, அவர்களை ஏற்றுக்கொள்ளாத ‘மனோபாவம்‘ மாற வேண்டும். இத்தகைய மனநிலையே தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திலும் பல பிரிவினைகளை உண்டாக்கி, ஒதுக்கி வைத்து, பிரித்தாளும் கசப்பான மனநிலையை உருவாக்குகிறது.

எனவே, வாழ்க்கை என்ற அழகிய பயணத்தில் அன்பின் பதிவுகளை விட்டு செல்வோம். நிபந்தனையற்ற அன்பையும், இரக்கத்தையும் கடவுள் தமது மன்னிப்பின் வழியாக நம்மிடம் வெளிப்படுத்துகின்றார். இறைவனின் அளவற்ற மன்னிப்பை பெற்று மகிழும் பேறுபெற்றுள்ள நாம், பிறரையும் மன்னித்து ஏற்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

மனித மனங்கள் கலங்குவது அணுகுண்டுகளால் மட்டுமல்ல, அன்பற்ற இதயங்களாலும் தான். ‘அன்பெனும்‘ உளிகொண்டு பாறைகளையும் சிற்பங்கள் ஆக்குவோம். இத்தகைய அன்பே மன்னிக்கும் பேரன்பு ஆகும்.

அருட்சகோதரி. பீ.இன்பென்டா,

மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.

Similar News